சேதமான ரோடுகள், தகவல் தொடர்பு வசதியின்றி தனித்தீவான கிராமங்கள்

கோபால்பட்டி:சாணார்பட்டி ஒன்றியம் கோம்பைப்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் அலைபேசி 'டவர்' இல்லாததால் அலைபேசியை பயன்படுத்த முடியாமலும், வாகனங்கள் செல்ல லாயக்கற்ற ரோடாலும் தினம் தினம் தவித்து வருகின்றனர்.

தகவல் தொழில்நுட்பம் 4ஜி, 5ஜி என விரைவான வளர்ச்சி பெற்றுள்ளதால் ஒரு இடத்தில் இருந்தபடி உலகையே உள்ளங்கைக்குள் வைத்துக்கொள்ள முடிகிறது. வியாபாரம், பணப்பரிமாற்றம், ஆன்லைன் வகுப்பு என தகவல் தொடர்பின் அனைத்து பயனையும் மக்கள் அனுபவித்து வருகின்றனர். இருந்தும் அலைபேசி பயன்படுத்த வசதியின்றி தனித்தீவாக ஏங்கும் கிராமங்கள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றன.

சாணார்பட்டி ஒன்றியத்தில் பெருமாள்கோவில்பட்டி, களத்துவீடு, பாப்பம்பட்டி, கோம்பைப்பட்டி, கடுக்காய்பட்டி, மலைப்பட்டி, சின்னகாளிபட்டி, படுகைகாடு, கொரசின்னம்பட்டி, சக்கிலியான்கொடை கிராமங்களில் அலைபேசி 'டவர்' இல்லாததால் அலைபேசி, இணையதள சேவையை பயன்படுத்த முடியாமல் 30 ஆண்டுகளுக்கு பின் தங்கிய நிலையில் உள்ளனர். அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு, காவல்துறை ஆகியவற்றை கூட தொடர்பு கொள்ள முடியாமல் தினமும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

பாப்பம்பட்டி, கடுக்காய்பட்டி, கொரசின்னம்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் ரோடுகள் சேதமடைந்து வாகனங்கள் செல்ல லாயக்கற்ற நிலையில் உள்ளன. ரோடுகள் அமைத்து பல ஆண்டுகள் ஆன நிலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மண் ரோடு போல் காட்சியளிக்கிறது. இந்த ரோடுகளில் தினமும் பயணிக்கும் முதியவர்கள், கர்ப்பிணிகள், பள்ளி மாணவர்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

--------------

ஆனந்தகிருஷ்ணன், மாநில இணை அமைப்பாளர், பா.ஜ., சமூக ஊடகப்பிரிவு, வேம்பார்பட்டி: கிராமத்தில் அலைபேசி 'டவர்' இல்லாததால் அலைபேசி, இணையதள வசதியை பயன்படுத்த முடியவில்லை. இங்குள்ள 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகள் நடத்தும் ஆன்லைன் வகுப்பிலும் பங்கேற்க முடியவில்லை. இதற்காக 6 கி.மீ., அப்பால் உள்ள அஞ்சுகுழிப்பட்டி, அய்யாபட்டிக்கு சென்று படிப்பதால் பாதிக்கின்றனர்.

விவசாயம், கால்நடை வளர்ப்பு அதிகமுள்ள இப்பகுதியில் தகவல் தொடர்பு இன்றி பால், விவசாய பொருட்களை விற்க 10 கி.மீ., துாரம் நேரடியாக செல்ல வேண்டியுள்ளது. மருத்துவ அவசரத்துக்கும் இதே நிலை தான். தனித்தீவாக உள்ள இப்பகுதியில் அலைபேசி 'டவர்' அமைத்து கிராமத்தை மேம்படுத்த வேண்டும்.

-----------------

வீரராகவன், மாநில செயலாளர், பா.ஜ., பொருளாதார பிரிவு, நத்தம்: கோம்பைபட்டியில் இருந்து பாப்பம்பட்டி செல்லும் ரோட்டில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். மழை பெய்தால் ரோட்டில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மாவட்டத்தின் கடைசி எல்லை, மலை கிராமமாக உள்ளதால் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். மக்களின் அடிப்படை தேவைகளில் அரசு கவனம் செலுத்தி நிதி ஒதுக்கி நிறைவேற்றி தர வேண்டும்.

---------------

தீர்வு சாணார்பட்டி ஒன்றிய கிராமங்களில் தனியார், பி.எஸ்.என்.எல்., அலைபேசி டவர் அமைத்து தகவல் தொடர்பு வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான ஆய்வை முதலில் மேற்கொள்ள வேண்டும்.

பாப்பம்பட்டி, கொரசின்னம்பட்டி மலை கிராம ரோடுகள் சேதமடைந்து உள்ளன. இவை குறைந்தது 2 முதல் 5 கி.மீ., துாரத்தில் உள்ளன. ரோடு அமைக்க குறைவான நிதி மட்டுமே தேவைப்படுகிறது. கிராம சாலை திட்டங்கள் மூலம் நிதி ஒதுக்கி ரோடுகளை சீரமைக்க அரசு முன்வர வேண்டும்.

Advertisement