மூத்தோருக்கு புத்துணர்வு அளித்த 'வாக்கிங்' கால்பந்து போட்டி
சென்னை: சென்னை கால்பந்து கிளப் சார்பில், ஷெனாய் நகரில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் விளையாட்டு திடலில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நட்பு ரீதியிலான போட்டிகள், நேற்று சிறப்பாக நடந்தன.
இதன் சிறப்பே, 40 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டோர் என இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. முன்னாள் தேசிய, சர்வதேச வீரர் - வீராங்கனையர் கூட உற்சாகமாக பங்கேற்று, தங்கள் திறமையை மீண்டும் வெளிப்படுத்தினர்.
ஓடி விளையாடிய காலத்தில் மைதானத்தை கலக்கியவர்கள், தற்போது நடந்தபடி துல்லியமான பாஸ், கட்டுப்பாடு மற்றும் அணிச்செயலால் ரசிகர்களை கவர்ந்தனர். 'ஓடக்கூடாது' என்பது முக்கிய விதியாக இருந்ததால், விளையாட்டில் சுறுசுறுப்பும், திட்டமிடலுமே முக்கிய பங்கு வகித்தது.
'வாக்கிங்' கால்பந்து தற்போது பல நாடுகளில் வேகமாக பிரபலமடைந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக, உலகளவில் விளையாடப்பட்டு வரும் இந்த விளையாட்டு, தமிழகத்தில் கடந்தாண்டு நவம்பரில் அறிமுகமானது.
முதல் முறையாக உருவான சென்னை அணி, நெய்வேலியில் நடந்த தென்மண்டல போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது. மேலும், ஆசிய- - பசிபிக் அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
பங்கேற்றோருக்கு, போட்டியில் விளையாடிய 'லான்சன்' குழும தலைவர் லங்காலிங்கம் பரிசுகளை வழங்கினார்.
நிகழ் வில், சர்வதேச மாஸ்டர் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் குணசேகரன், அகில இந்திய வாக்கிங் கால்பந்து சங்க செயலர் ஞானபிரகாசம், துணை தலைவர் உமா, மகளிர் குழு தலைவர் ரேணுகா லட்சுமி, சென்னை மாவட்ட வாக்கிங் கால்பந்து சங்க தலைவர் குரு, செயலர் பாஸ்கர், மகளிர் ஒருங்கிணைப்பாளர் தமீம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
@block_B@
அகில இந்திய வாக்கிங் கால்பந்து மகளிர் குழு ஒ ருங்கிணைப்பாளர் ரேணுகா லட்சுமி கூறியதாவது : ஓடி விளையாடும் கால்பந்துக்கு மாற்றாக, நடந்து விளையாடும் இந்த விளையாட்டு, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சென்னையில் முதல் முறையாக போட்டியை அறிமுகப்படுத்தினோம். குறிப்பாக மூத்தோர்களுக்கு பாது காப்பானதாக இருப்பதால், அதிக வரவேற்பு கிடைக்கிறது. சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் மட்டுமின்றி, போலீஸ் அணியினரும் இதை ஆர்வமாக விளையாடி வருகின்றனர். பெண்களும் அதிக அளவில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.block_B