கரடிகள் நடமாட்டம் கேமராக்கள் பொருத்தம்
கூடலுார்: பெரியாறு புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் இருப்பதைத் தொடர்ந்து வனத்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
கேரளா பெரியாறு புலிகள் காப்பகத்தை ஒட்டி குமுளி, முல்லையாறு, செல்லார் கோயில் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன.
கடந்த சில நாட்களாக முல்லையாறு உள்ளிட்ட பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் இருந்தன. அங்குள்ள இந்துலேகா என்பவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டிவி. கேமராவில் கரடிகள் நடமாட்டம் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில்அப்பகுதி மக்கள் கரடிகளைப் பிடித்து வனப்பகுதிக்குள் விட வனத்துறையிடம் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து செல்லார் கோயில் பிரிவு வனத்துறையினர் குடியிருப்பு பகுதிகளை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். நடமாட்டம் தொடர்பாக தகவல் சேகரிக்கப்பட்டு அப்பகுதியில் கூண்டு வைக்கவும் முடிவு செய்துள்ளனர். இரவு நேரங்களில் மக்கள் பாதுகாப்பின்றி வெளியில் வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.