ஈரோடு அருகே கட்டட பணியில் விபத்து மேஸ்திரி, பெண் தொழிலாளி பரிதாப பலி


ஈரோடு, சோலாரில் புதிதாக கட்டப்படும் கட்டடத்தில், மேஸ்திரி மற்றும் பெண் தொழிலாளி பலியானது, சோகத்தை ஏற்படுத்தியது.

கொடுமுடி சாலைபுதுார் குப்பம்பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற மின்வாரிய பணியாளர் செல்லப்பன், 76; ஈரோட்டை அடுத்த சோலார் இரணியன் வீதியில், புதிதாக வீடு கட்டுகிறார். கட்டட மேஸ்திரியான விளக்கேத்தி காமராஜ் நகர் தேவராஜ், 44; தொழிலாளியான சிவகிரி எல்.பி.பி., தெரு முத்தையா மனைவி மாரியம்மாள், 55, நேற்று காலை பணியில் ஈடுபட்டிருந்தனர். மூன்றாவது தளத்துக்கு மணலை கொண்டு செல்ல, இயந்திரம் ஏற்பாடு செய்தனர். ஆனால் முறையாக பொருத்தவில்லை என தெரிகிறது.

இதனால் மேலே சென்ற இயந்திரம் கீழ் நோக்கி இறங்க தொடங்கியது. தேவராஜ், மாரியம்மாள் இருவரும் இயந்திரத்தை இழுத்து பிடிக்க முயன்றனர். அது முடியாமல் போக இருவரும் இயந்திரத்துடன் சேர்த்து தரையில் விழுந்தனர். இதில் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்தில் பலியாகினர். ஈரோடு தாலுகா போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான தேவராஜூக்கு ஒரு மகள், மாரியம்மாளுக்கு நான்கு மகள்கள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement