கள்ளக்குறிச்சியில் குழந்தை திருமணங்கள் நாளுக்கு நாள்...  அதிகரிப்பு :மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமா

திருக்கோவிலுார்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறுமிகள் மாயம், குழந்தை திருமணம் போன்ற அவலத்தைப் போக்க மாவட்ட நிர்வாகம் பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் அவசரமாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி கல்வியில் பின் தங்கிய மாவட்டம். அதிலும் முழுதும் விவசாயத்தை நம்பி இருக்கின்றனர். இது போதிய வருமானத்தை கொடுக்காத நிலையில், செங்கல் சூளை, கட்டுமானப்பணி, கரும்பு வெட்டும் கூலி வேலை என பெற்றோர்கள் பெங்களூரு, சென்னை, மும்பை என பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து வேலை செய்கின்றனர்.

இதனால் பிள்ளைகளை வீட்டில் இருக்கும் முதியவர்களின் பாதுகாப்பில் விட்டு சென்று விடுகின்றனர். பெற்றோர்களின் அரவணைப்பு இல்லாததால் பல பிள்ளைகள் பள்ளிக்கு செல்லாமல் இடைநிறுத்தம், கல்வியில் பின்னடைவு ஏற்படுகிறது. கல்வியறிவு இன்மை, வருமை காரணமாக பெண் குழந்தைகளை கருவிலேயே கண்டறிந்து அழிப்பது, குழந்தை திருமணத்தை அரங்கேற்றும் அவலம் வெளி உலகுக்கு தெரியாத வகையில் நடந்து வருகிறது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக வறுமை நிலையில் வெளியூரில் வேலை செய்யும் பெற்றோர்கள், பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை கருதி சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்து விடுகின்றனர். இன்னும் சில சிறுமிகள் பெற்றோர்களின் வழிகாட்டுதல் இல்லாததால் சிறுவயதிலேயே காதலித்து வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொள்ளும் சம்பவமும் அரங்கேறுகிறது.

தற்பொழுது விடுமுறை காலம் என்பதால் பள்ளி படிப்பை முடிக்கும் பெண் பிள்ளைகள் காணாமல் போவது குறித்த புகார்கள் போலீஸ் ஸ்டேஷனில் குவியத் துவங்கியிருக்கிறது. திருக்கோவிலுார் போலீஸ் ஸ்டேஷனில் இந்த மாதத்தில் மட்டும் இதுவரை சிறுமிகள் உள்ளிட்ட 13 பெண் பிள்ளைகள் காணாமல் போனதாக புகார் பதிவாகியுள்ளது.

இதற்கெல்லாம் காரணம் பெற்றோர்களின் அரவணைப்பு கிடைக்காததும், போதிய விழிப்புணர்வு இல்லாததும், கல்வியறிவு குறைபாடுமே காரணமாக கூறப்படுகிறது.

இதனைக் காணும் பெற்றோர்கள் குழந்தை திருமணத்தை அரங்கேற்றுகின்றனர். இதன் மூலம் கர்ப்பமடையும் சிறுமிகள், பாதுகாப்பான பிரசவத்திற்கு மருத்துவமனையை நாடும் பொழுது, அரசு மருத்துவமனை அதிகாரிகள் மூலம், சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. அவர்களும், இது குறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர். புகாரின் அடிப்படையில் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. போக்சோ வழக்கு அதிகரிக்க இதுவும் ஒரு காரணமாக அமையும் நிலையில். அது பெற்றோர்களுக்கும் சிறுமிகளுக்கும் வாழ்க்கையில் பெறும் சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது. போலீஸ் ஸ்டேஷனில் தொடர்பு வைத்திருக்கும் கட்டப்பஞ்சாயத்து கும்பலுக்கு இது சாதகமாகி விடுகிறது.

இது போன்ற சிக்கல்களால் பெண் பிள்ளைகளின் கல்வி தடைபடுகிறது. சிறு வயதிலேயே குழந்தைக்கு பாலியல் ரீதியாக தாக்குதல் தொடங்குகிறது. பாதுகாப்பதற்காக திருமணம் என்ற பந்தத்தில் தள்ளப்படுவதால் தனக்குத் தேவையானதை தானே தேர்வு செய்யும் சுதந்திரமும் பெண் பிள்ளைகளுக்கு மறுக்கப்படுகிறது.

இக்கொடுமைக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டு மென்றால் ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளி ஆசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர், மகளிர் சுய உதவி குழு, சமூக ஆர்வலர்களை கொண்ட கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும்.

மாணவிகள் பள்ளி இடைநிறுத்தத்தை முழுமையாக கண்காணித்து, அவர்களின் பிரச்சினைகளை அன்போடும், அரவணைப்போடும் அணுகி நிவர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பை ஆசிரியர்களிடம் அரசு வழங்க வேண்டும். அடிப்படையான இப்பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்த வேண்டியது அவசர அவசியமாகியுள்ளது. அப்பொழுதுதான் மாவட்டம் கல்வியில் முன்னிலை பெரும், பொருளாதாரத்திலும் வளர்ச்சி அடையும்.


கவலைக்கிடம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 'இன்று மாயம் - நாளை திருமணம்'...

சிறுமிகளை காக்க உரிய விழிப்புணர்வு அளிப்பது அவசியம்

குழந்தை திருமணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க எழுச்சி தேவை


குழந்தை திருமணம், சிறுமிகள் காணாமல் போவது அதிகரிப்பு

கள்ளக்குறிச்சியில் பெற்றோர் பொறுப்பு உணர்வு அவசியம்

Advertisement