ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல்த



ஏற்காடு சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்தோடு, ஏற்கனவே பள்ளி, கல்லுாரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், வெயிலும், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் கொளுத்துகிறது. அதன் தாக்கத்தில் இருந்து தப்ப, வார இறுதி நாளான நேற்று, ஏராளமான மக்கள், கார்கள், இருசக்கர வாகனங்களில், ஏற்காட்டுக்கு படையெடுத்தனர்.

இதனால் மலை அடிவாரம் முதல், மலைப்பாதை முழுதும், குறிப்பாக கொண்டை ஊசி வளைவு
களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர். தொடர்ந்து ஏற்காடு சென்ற சுற்றுலா பயணியர், பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர். படகு இல்லத்தில் பயணச்சீட்டு வாங்கி வெகுநேரம் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
ஆனால், 'பார்க்கிங்' வசதி இல்லாததால் சுற்றுலா பயணியர், சுற்றி பார்க்க சென்ற இடங்களில், சாலை ஓரங்களில் கார்கள், இருசக்கர வாகனங்களை நிறுத்திச்சென்றனர். இதனால் அந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் அவதிக்கு ஆளாகினர்.

10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது கார்தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் செல்வம், 35. இவரது மனைவி விஜயா, 30, குழந்தைகள் மித்துன், 13, நித்துன், 8, மைத்துனர் ஜெயப்பிரகாஷ், 23. இவர்கள், 'பிரீசா' காரில் நேற்று ஏற்காடு வந்து சுற்றிப்பார்த்தனர்.


மாலை, 4:00 மணிக்கு, ஊருக்கு புறப்பட்டனர். செல்வம் ஓட்டினார். 16வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது, குரங்கு, காரின் முன் கண்ணாடி மீது குதித்தது. செல்வம் நிலை தடுமாறி, காரை திருப்ப, சாலையோர தடுப்புச்சுவர் மீது மோதி, 10 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. காரில் இருந்தவர்கள், சிறு காயங்களுடன் தப்பினர். அவர்களை, சக சுற்றுலா பயணியர் மீட்டு, ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement