'ஒரத்துப்பாளையம் அணை மீட்பு: தேம்ஸ் நதி போன்று முனைப்பு'

பல்லடம்:பல்லடம் 'வனம்' அமைப்பின் சார்பில், 'வான்மழை' மாதாந்திர கருத்தரங்கம் வனாலயம் அடிகளார் அரங்கில் நடந்தது. செயல் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் சுந்தரராஜ் வரவேற்றார்.

காங்கயம் 'துளிகள்' அமைப்பின் செயலாளர் கவுதம் தண்டபாணி பேசியதாவது:

மரங்கள் மழைக்கும், துாய்மையான காற்றுக்கும் மட்டுமின்றி, மனிதனின் வெற்றி மற்றும் மனமகிழ்ச்சிக்கும் ஆதாரமாக விளங்குகின்றன. லண்டனின் தேம்ஸ் நதி ஒரு காலத்தில் 'இறந்து போன நதி' எனப்பட்டது. ஆனால், மரங்கள் மற்றும் முறையான பராமரிப்பு மூலம் அது இன்று சுத்தமான நதியாக மாறியுள்ளது. அதே உத்வேகத்துடன், ஒரத்துப்பாளையம் அணையை மீட்டெடுக்கும் முயற்சியில் 'துளிகள்' அமைப்பு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இயற்கை வளம் எங்கு உள்ளதோ, அங்கு தொழில் வளர்ச்சி இயல்பாகவே பெருகும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

பெங்களூரு மதர் இந்தியா பார்ம்ஸ் நிறுவனர் அரங்க துரைராஜ் பேசினார். இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்த விவசாயிகள் தீபா, ராமசாமி, தமிழரசி, அருணாச்சலம் ஆகியோருக்கு 'நம்மாழ்வார் விருது' வழங்கப்பட்டது.

இணை செயலாளர் ஈஸ்வரமூர்த்தி ஒருங்கிணைத்தார். இலக்கியத் துறை இயக்குனர் அனந்தகிருஷ்ணன் நன்றி கூறினார்.


Advertisement