தாராபுரத்தின் வெற்றி 'அரசி' யார்?
திருப்பூர்:எட்டு பெண் வேட்பாளர்கள் களம் கண்ட தாராபுரத்தில், ஆண்களைப் பின்னுக்குத் தள்ளிப் பெண்கள் நடத்திய மவுனப் புரட்சியால் வாக்குப்பதிவு 88.84 சதவீதமாக எகிறியுள்ளது. கடந்த காலத்து நுாலிழை வெற்றியை மனதில் வைத்து தி.மு.க -- அ.தி.மு.க ஆகிய இரு தரப்பும் மல்லுக்கட்டிய நிலையில், இந்த அதிரடி வாக்குப்பதிவு உயர்வு யாருடைய அரசியல் கணக்கைக் கலைக்கப் போகிறது என்ற திக்.. திக்.. எதிர்பார்ப்பு தொகுதியில் தொற்றிக்கொண்டுள்ளது
கடந்த 2021 தேர்தலில், தற்போதைய மத்திய அமைச்சர் முருகனை வெறும் 1,393 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி, தி.மு.க-வின் கயல்விழி அமைச்சரானார். இந்த முறை கயல்விழிக்கு 'சீட்' மறுக்கப்பட, தி.மு.க சார்பில் டாக்டர் இந்திராணி களமிறங்க, அ.தி.மு.க-வோ மாவட்ட ஊராட்சித் தலைவராக இருந்த சத்தியபாமாவை மல்லுக்கட்ட விட்டிருக்கிறது.
டாப் கியர் பிரசாரம்
தொகுதியைக் கைப்பற்ற நாற்புறமும் டாப் கியரில் பிரசாரம் பறந்தது.
நகரப் பகுதியில் தி.மு.க மீது நிலவும் சில அதிருப்திகளைச் சாதகமாக்க அ.தி.மு.க துடித்தாலும், கிராமம் கிராமமாகச் சென்று 'பூத்' அளவில் வேலை பார்த்து தி.மு.க. பதிலடி கொடுத்தது. இரு தரப்பும் சரிசமமாக நின்ற வேளையில், த.வெ.க-.வின் விஜய் அலையும், நாம் தமிழரின் வாக்கு வங்கியும் யாருடைய வெற்றியைப் பறிக்கப் போகிறது என்பதுதான் இப்போது தொக்கி நிற்கும் கேள்வி.
பெண்கள் ஆதிக்கம்
தாராபுரம் தொகுதியில். போட்டியிட்ட 9 வேட்பாளர்களில் 8 பேர் பெண்கள் என்பது ஒரு பக்கம் ஆச்சரியம் என்றால், ஓட்டுப் பெட்டிகளிலும் பெண்களின் ஆதிக்கமே அப்பட்டமாகத் தெரிகிறது.
மொத்தமாகப் பதிவான 1,97,582 வாக்குகளில், ஆண்களின் பங்களிப்பு 95,384. ஆனால் பெண்களின் எண்ணிக்கையோ 1,02,196-ஐத் தாண்டி அசத்தியுள்ளது. ஆண்களை விட 6,812 பெண்கள் கூடுதலாகத் திரண்டு வந்து தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர்.
கடந்த தேர்தலை விட இம்முறை 6,262 பெண்கள் கூடுதலாக ஓட்டுச்சாவடி நோக்கிப் பயணித்திருக்கின்றனர். வேட்பாளர் தேர்வு முதல் வாக்குப்பதிவு வரை தாராபுரம் 'பெண்களின் கோட்டை' என்பதை மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியிருக்கிறது.
முந்தைய இரண்டு தேர்தல்களை விட இம்முறை யாரும் எதிர்பார்க்காத வகையில் 14.69 சதவீதம் வாக்குப்பதிவு அதிகரித்து, 88.84 சதவீதத்தை எட்டியுள்ளது.
கடந்த முறை அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ. நின்று நுாலிழையில் தோற்றது, இம்முறை அ.தி.மு.க நேரடியாகக் களம் இறங்கியிருப்பது எனச் சூழல் முழுவதுமாக மாறியிருக்கிறது. 'யாருக்கு விழும் ஓட்டு?' என்ற குழப்பத்தில் பூத் ஏஜென்ட்களிடம் விபரங்களைக் கேட்டுப் புலம்பி வருகின்றனர் கட்சி நிர்வாகிகள். தாராபுரத்தின் இந்த மவுனப் புரட்சி யாருக்கு மகுடம் சூட்டப்போகிறது... விடை தெரிய மே 4 வரை காத்திருக்கத்தான் வேண்டும்!
மேலும்
-
போர் நிறுத்தம் குறித்து புடினுடன் ஆலோசிக்க திட்டம்; ரஷ்யா சென்றார் ஈரான் வெளியுறவு அமைச்சர்
-
டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச்சூடு; அசராமல் சாலட் சாப்பிட்டவர் வீடியோ வைரல்
-
மனைவிக்கு விஜய் ரூ.12.6 கோடி கடன்: விசாரிக்க கோரிய வழக்கு தள்ளுபடி
-
மானாமதுரை சித்திரை விழா திருக்கல்யாணம்
-
ஒழுங்குமுறை விற்பனை கூடம் அதிகாரிகளை கண்டித்து மறியல்
-
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு