மனைவிக்கு விஜய் ரூ.12.6 கோடி கடன்: விசாரிக்க கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை:சென்னை, பெரம்பூர் தொகுதியில், விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில், மனைவிக்கு 12.6 கோடி ரூபாய் கடன் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளதை ஆய்வு செய்ய கோரிய வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

தமிழக சட்டசபை தேர்தலில், த.வெ.க., தலைவர் விஜய், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இதற்காக, இரு தொகுதிகளிலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்.

பெரம்பூர் தொகுதியில் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில், மனைவி உள்ளிட்டோருக்கு கடன் கொடுத்துள்ளதாக, அவர் கூறியது குறித்து ஆய்வு செய்யக் கோரி, கொடுங்கையூரை சேர்ந்த எம்.பி.வெங்கடேஷ் என்பவர் மனு தாக்கல் செய்து உள்ளார்.

மனுவில், 'விவாகரத்து கோரி, விஜய் மனைவி சங்கீதா வழக்கு தாக்கல் செய்துள்ளள்ள நிலையில், வேட்புமனுவில் 12.6 கோடி ரூபாய் கடன் கொடுத்து உள்ளதாக, விஜய் குறிப்பிட்டு உள்ளார். இது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. வேட்புமனுவில் சொத்து விபரங்களை தெரிவிப்பது வெறும் சடங்கு அல்ல. அதில் உண்மை விபரங்களை மறைப்பது, தேர்தல் நடைமுறையை மோசடி செய்வது போன்றது' என, கூறப்பட்டு உள்ளது.

இந்த மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, 'இதுபோன்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. தற்போது தேர்தலும் முடிந்து விட்டதால், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல' என கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

***

Advertisement