ஒழுங்குமுறை விற்பனை கூடம் அதிகாரிகளை கண்டித்து மறியல்

பெரம்பலுார்: ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பணிகளை புறக்கணித்த அரசு அதிகாரிகளை கண்டித்து, விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.

அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் இயங்கும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு, சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் எள், கடலை, தலா 1,000 மூட்டைகளை விற்பனைக்கு ஏப்ரல் 27 ல் கொண்டு வந்தனர். ஆனால், கொள்முதல் செய்ய, வியாபாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் வரவில்லை.

இதனால், விவசாயிகள் கொண்டு வந்த விளைபொருட்கள், மூன்று நாட்களாக தேக்கமடைந்து, தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். இதனை கண்டித்து, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு முன், திடீரென சாலையில் அமர்ந்து, மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, விவசாயிகளிடம் அதிகாரிகள் பேச்சு நடத்தியதால், மறியல் கைவிடப்பட்டது. இதனால், திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement