டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச்சூடு; அசராமல் சாலட் சாப்பிட்டவர் வீடியோ வைரல்

2


வாஷிங்டன்: அதிபர் டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச்சூடு நடந்து அனைவரும் உயிருக்கு அஞ்சி ஓடிய நிலையில், மைக்கேல் கிளான்ஸ் என்ற ஒரே ஒருவர் மட்டும் அமைதியாக சாலட் சாப்பிட்ட வீடியோ வைரலாகி உள்ளது.


வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கம் சார்பில், ஆண்டுதோறும் விருந்து நிகழ்ச்சி நடக்கும். இந்த பாரம்பரியம், 1921ம் ஆண்டு முதல் தொடர்கிறது. இந்த நிகழ்ச்சியில், சிறந்த பத்திரிகையாளர்களுக்கு விருதுகள் வழங்கப் படுவது வழக்கம்.

பதுங்கினர்



வாஷிங்டனில் உள்ள ஹில்டன் நட்சத்திர விடுதியின் தரைதள அரங்கில், நேற்று இந்த விருந்து நிகழ்ச்சி நடந்தது. அதில், அமெரிக்க அதிபர் டிரம்ப், துணை அதிபர் வான்ஸ் என பலரும் பங்கேற்றிருந்தனர். விருந்தினர்களுக்கு உணவு உபசரிப்பு நடந்து கொண்டிருந்த போது, அரங்கிற்கு வெளியே பாதுகாப்பு சோதனைகள் நடைபெறும் பகுதிக்கு அருகே, ஒருவர் ஓடி வந்து துப்பாக்கிச்சூடு நடத்தினார். ஐந்து, ஆறு முறை குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



துப்பாக்கிச்சூடு சத்தத்தை கேட்டதும் அரங்கினுள்ளே இருந்தவர்கள் மேஜை, நாற்காலிகளுக்கு அடியில் பதுங்கினர். அதிபர் டிரம்பும், அவரது மனைவி மெலானியாவும் மேடையில் பதுங்கினர். துப்பாக்கிச்சூடு நடந்த உடன், அமெரிக்காவின் ரகசிய பாதுகாப்பு படையினர் , மேடையில் இருந்த அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலானியாவை, ரகசிய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பான இடத்திற்கு வேகமாக அழைத்து சென்றனர்.


இந்த பதைபதைக்க வைக்கும் வினாடிகள் வீடியோ காட்சிகளாக சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.


அந்த வீடியோ காட்சிகளில் அந்த இடத்தில் இவ்வளவு களேபரமாக நடக்க ஒருவர் மட்டும் அந்த இடத்தில் அமர்ந்து எந்த வித பரபரப்பும் இல்லாமல், சாலட் சாப்பிட்டு கொண்டு இருந்தார். உயிருக்கு அஞ்சாமல் சாப்பிட்டு கொண்டு இருந்தது பலரின் கவனத்தை பெற்றது.



இந்நிலையில், அதே இடத்தில் அமர்ந்து உணவு அருந்தியதற்கான காரணம் குறித்து மைக்கேல் கிளான்ஸ் என்ற கலைஞர் விளக்கம் அளித்து உள்ளார்.அவர் கூறியதாவது: நியூயார்க்கில் பிறந்து வளர்ந்தேன். அதனால் எதை கண்டும் பயம் இல்லை.


அந்தஇடத்தில் ஏராளமான பாதுகாப்பு படையினர் இருந்ததால் பாதுகாப்பாக இருந்ததை போல் உணர்ந்தேன். இதனால், இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் எனக் கருதவில்லை. முதலில் எனக்கு முதுகு வலி இருந்தது. என்னால் தரையில் படுக்க முடியாது. ஒரு வேளை நான் தரையில் படுத்தாலும், அங்கிருந்து என்னை தூக்கிவிடவே, அவர்கள் ஆட்களை வரவழைக்க வேண்டியிருக்கும்.


அடுத்து அதிகம் சுத்தம்பார்ப்பேன். அழுக்கு நிறைந்த தரை மீது நான் புதிதாக அணிந்திருந்த ஆடையுடன் படுப்பதற்கோ அல்லது அமர்வதோற்கோ சாத்தியமே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்

Advertisement