திருவாடானை தாலுகாவில் தீராத பிரச்னை: தொடரும் தீக்குளிப்பு
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் தீராத பிரச்னைகளால் அலுவலகம் முன்பு தீக்குளிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. தாலுகா அலுவலகம் போராட்ட களமாக மாறி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு கடந்த இரு ஆண்டுகளாக தீக்குளிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. சில நாட்களுக்கு முன்பு தளிர்மருங்கூர் கிராமத்தை சேர்ந்த தாயும், மகனும் கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக கூறி தீக்குளிக்க முயன்றனர். திருவாடானை தாலுகா அலுவலகம் கடந்த இரு ஆண்டுகளாகவே போராட்டங்களின் மையபுள்ளியாக இருந்து வருகிறது.
நிலம் தொடர்பான பிரச்னைகளில் தீர்வு கிடைக்காத மக்கள், பொதுப் பாதை ஆக்கிரமிப்புகள் குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது, பள்ளி சான்றிதழ் வழங்குவதில் தாமதம் போன்ற பல்வேறு காரணங்களால் தீர்வு கிடைக்காத மக்கள் தீக்குளிப்பு போராட்டத்தை கையில் எடுத்து வருகின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
மக்கள் தாலுகா அலுவலகத்திற்கு வருவது தன் வாழ்வாதார பிரச்னைக்கு தான். அலுவலக படிக்கட்டுகளில் ஏறி, இறங்கும் முதியவர்களும், ஏழைகளும் வேறு வழியின்றி அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க இது போன்ற விபரீத முடிவுகளை எடுக்கின்றனர். நேர்மையான முறையில் கொடுக்கும் மனுக்களுக்கு முன்னுரிமை கிடைப்பதில்லை. கவனிப்பு இல்லை என்றால் கோப்பு நகராது என்ற மனநிலை மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
மக்களின் அடிப்படை புகார்களுக்கு அதிகாரிகள் உரிய நேரத்தில் தீர்வு கண்டால் இது மாதிரி சம்பவங்கள் நடக்காது. இதே நிலை நீடித்தால் திருவாடானை தாலுகா அலுவலகம் ஒரு பெரும் அசம்பாவிதத்தை சந்திக்க நேரிடும். எனவே மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.
--