மேயர், துணை மேயர் பதவிகளை தக்க வைத்தது பா.ஜ., காங்கிரஸ் வேட்பாளர்கள் 9 ஓட்டுகளுடன் படுதோல்வி

புதுடில்லி: டில்லி மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளை பா.ஜ., தக்கவைத்துக் கொண்டது.

டில்லி மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது.

எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி, கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மேயர் தேர்தலை புறக்கணித்தது. ரோஹினி கிழக்கு வார்டு கவுன்சிலர் பிரவேஷ் வாஹி பா.ஜ., சார்பிலும், காங்கிரஸ் சார்பில் ஹாஜி ஜராப் ஆகிய இருவரும் மேயர் பதவிக்கு போட்டியிட்டனர்.

பிரவேஷ் வாஹி 156 ஓட்டுகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸின் கபீர் நகர் கவுன்சிலர் ஹாஜி ஜராப் ஒன்பது ஓட்டுகள் மட்டுமே பெற்றிருந்தார்.

துணை மேயர் அதேபோல, துணை மேயர் பதவிக்கு போட்டியிட்ட ஆனந்த் விஹார் பா.ஜ., கவுன்சிலர் மோனிகா பந்த், 156 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸின் முபாரக்பூர் கவுன்சிலர் ராஜேஷ் குமார் குப்தா ஒன்பது ஓட்டுகள் பெற்று படுதோல்வி அடைந்தார்.

மேலும், பா.ஜ.,வை சேர்ந்த பேகம்பூர் கவுன்சிலர் ஜெய் பகவான் யாதவ், பஹர்கஞ்ச் கவுன்சிலர் மணீஷ் சத்தா மற்றும் ஆம் ஆத்மியை சேர்ந்த ஷாலிமர் பாக் கவுன்சிலர் ஜலஜ் சவுத்ரி நிலைக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

இந்திரபிரஸ்தா விகாஸ் கட்சியை சேர்ந்த, 14 கவுன்சிலர்களும் பா.ஜ.,வுக்கு ஆதரவு அளித்திருந்தனர்.

டில்லி மாநாகராட்சியில் மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தலில், 249 கவுன்சிலர்கள், டில்லி சட்டசபை பரிந்துரைத்த 14 எம்.எல்.ஏ.,க்கள், ஏழு லோக்சபா எம்.பி.,க்கள் மற்றும் டில்லியின் மூன்று ராஜ்யசபா எம்.பி.,க்கள் என, 273 பேர் ஓட்டுப் போட தகுதி பெற்றிருந்தனர். வெற்றி பெற 137 ஓட்டுகள் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

மேயர் தேர்தல் அறிவித்த உடனேயே ஆம் ஆத்மி கட்சியின் டில்லி மாநில தலைவர் சவுரவ் பரத்வாஜ் வெளியிட்ட அறிவிப்பில், 'மேயர் தேர்தலில் பங்கேற்படை தவிர்த்து ஆம் ஆத்மி நடுநிலை வகிக்கும்.

'இதனால், மாநகராட்சியில் பா.ஜ.,வின் நிர்வாக சீர்கேட்டை மக்களுக்கு உணர்த்த முடியும்' என கூறியிருந்தார்.

மேயர், துணை மேயர் மற்றும் நிலைக்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கவுன்சிலர்களுக்கு, முதல்வர் ரேகா குப்தா, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அதேபோல, டில்லி மாநில பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா மற்றும் கட்சி நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கட்சிகளின் பலம்

மொத்தம் 250 வார்டுகளைக் கொண்ட டில்லி மாநகராட்சியில் பா.ஜ.,வுக்கு 123 கவுன்சிலர்கள், ஏழு லோக்சபா எம்.பி.,க்கள், இரண்டு ராஜ்யசபா எம்.பி.,க்கள் மற்றும் 11 எம்.எல்.ஏ.,க்கள் என, 143 ஓட்டுகள் உள்ளன.

ஆம் ஆத்மிக்கு 100 கவுன்சிலர்கள், மூன்று எம்.எல்.ஏ.,க்கள் இரண்டு ராஜ்யசபா எம்.பி.,க்கள் என, 105 ஓட்டுகள் உள்ளன.

ஆம் ஆத்மியிலிருந்து பிரிந்த கவுன்சிலர்கள் துவக்கிய இந்திரபிரஸ்தா விகாஸ் கட்சிக்கு - 15, காங்கிரஸ் கட்சிக்கு - 9 கவுன்சிலர்கள் உள்ளனர். இரண்டு வார்டுகளில் சுயேச்சைகள் கவுன்சிலர் பதவி வகிக்கின்றனர். ஒரு வார்டு காலியாக உள்ளது.

Advertisement