ரூ.70 லட்சம் கொள்ளையடித்த 5 பேர் கைது; ரூ.53 லட்சம் மீட்பு
புதுடில்லி: தனியார் நிறுவன ஊழியரிடம், 70 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த, நான்கு பேர் கைது செய்யப்பட்டு, 53.4 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டது.
மேற்கு டில்லி இந்தர்புரியில் கடந்த மாதம் 31ம் தேதி, தனியார் நிறுவன ஊழியர் பணம் வசூல் செய்து கொண்டு சென்றார். கிருஷி குஞ்ச் அருகே அவரை வழிமறித்த மூன்று பேர், வசூல் பணம் 70 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்த புகார்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதே நிறுவனத்தின் ஊழியர்களில் ஒருவரான விகாஷ், 22, என்பவர், வசூல் பணம் குறித்து, தன் கூட்டாளிகளுக்கு தகவல் தெரிவித்து கொள்ளை நாடகத்தை அரங்கேற்றி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
டில்லி மற்றும் அண்டை மாநிலங்களான ஹரியானா, உத்தர பிரதேசம் ஆகிய இடங்களில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி விகாஷ், அவரது கூட்டாளிகள் முகமது கைப், 25, ரிஷி யாதவ், 22, மற்றும் சவுரவ் என்ற பச்சா, 23 ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.
கொள்ளையடித்த பணத்தில் 53.40 லட்சம் ரூபாய் மற்றும் ஒரு பைக் ஆகியவை கைப்பற்றப்பட்டன. நான்கு பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது.