வாடகைக்கு குடியிருந்த வாலிபரை கொன்ற வீட்டு உரிமையாளர் சரண்

புதுடில்லி: தன் மனைவியுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகம் அடைந்து, வாடகைக்கு குடியிருந்தவரை கொலை செய்த வீட்டு உரிமையாளர் போலீசில் சரண் அடைந்தார்.

வடமேற்கு டில்லியின் ஷாலிமர் பாக் இந்திரா காலனியில் வசிப்பவர் வீரேந்தர், 35. இவருக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் கன்ஹையா, 29, என்பவர் வாடகைக்கு வசித்தார்.

தன் மனைவியுடன் கன்ஹையாவுக்கு தொடர்பு இருப்பதாக வீரேந்தருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக, கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று காலை ஷாலிமர் பாக் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த வீரேந்தர், தன் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் கன்ஹையாவை கொலை செய்து விட்டதாக சரண் அடைந்தார்.

அவரையும் அழைத்துக் கொண்டு வீரேந்தர் வீட்டுக்கு வந்த போலீசார், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்த கன்ஹையா உடலை மீட்டு, அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து வீரேந்தரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம் ஷாலிமர் பாகில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement