சிங்கார சென்னை அட்டைக்கு 'ரீசார்ஜ்' செய்தும் மெட்ரோ நிலையத்தில் பயணியர் காத்திருப்பு

சென்னை: சிங்கார சென்னை அட்டைக்கு ஆன்லைனில் 'ரீசார்ஜ்' செய்தாலும், மெட்ரோ ரயில் நிலையங்களில், இருப்பு தொகையை, 'அப்டேட்' செய்ய காத்திருக்கும் நிலை இருப்பதாக, பயணியர் புகார் கூறுகின்றனர்.

மெட்ரோ ரயிலில் பயணிக்க வசதியாக, 'சிங்கார சென்னை அட்டை' 2023ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, இந்த அட்டையை பயன்படுத்தி, மாநகர பேருந்துகளிலும் பயணிக்க வழிவகை செய்யப்பட்டது.

இதனால், சிங்கார சென்னை அட்டையை, தினமும் லட்சக்கணக்கனோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, வரும் 1ம் தேதி முதல், மெட்ரோ ரயில் பயணியர் அட்டை செல்லாது; சிங்கார சென்னை அட்டையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிங்கார சென்னை அட்டைக்கு, ஆன்லைனில் 'ரீசார்ஜ்' செய்யும் வசதி உள் ளது. ஆனால், அப்படி ரீசார்ஜ் செய்தாலும், மெட்ரோ ரயில் நிலையத்தில் கவுன்டரில் அளித்து, இருப்பு தொகையை, 'அப்டேட்' செய்தால் மட்டுமே, அட்டையை பயன்படுத்த முடிகிறது.

இதுகுறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:

சிங்கார சென்னை அட்டையை 'ரீசார்ஜ்' செய்து, மாநகர பேருந்துகளில் பயணிப்பதில் எந்த தடையும் இல்லை. ஆனால், மெட்ரோ ரயிலில் பய ணிக்க, மீண்டும் கவுன்டரில் நின்று, ரீசார்ஜ் தொகையை அப்டேட் செய்தால் மட்டுமே பயணிக்க முடிகிறது. காலதாமதமும் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

பயணியர், சிங்கார சென்னை அட்டையை ஆன்லைனில் ரீசார்ஜ் செய்தாலும், மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி கதவுகளை தாண்டி செல்லவும், அவர்களது இருப்பு தொகையை, கணினியில் அப்டேட் செய்யவும் வேண்டிய நிலை ஏற்படுகிறது.

பயணியர் சிரமத்தை போக்க, மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி கருவிகளை பயன்படுத்தி, ஊழியர்களின் உதவி இன்றி, தாங்களே இருப்பு தொகையை புதுப்பித்துக்கொள்ள வழிவகை செய்யப் பட்டுள்ளது.

இதற்காக, அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும், இந்த தானியங்கி கருவிகள் பயன்பாட்டில் உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement