இறுதிச்சடங்கு ஊர்வலத்தை முறைப்படுத்த சட்டம்; உயர்நீதிமன்றம் உத்தரவு

42


மதுரை: ''பாதுகாப்பு கருதி இறுதிச் சடங்கு ஊர்வலங்களை முறைப்படுத்துவதற்கான கட்டுப்பாட்டு மற்றும் தண்டனை விதிகளை உள்ளடக்கிய சட்டம் இயற்றுவதன் அவசியத்தை தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும்,'' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை பெருங்குடி அருகே ஆலங்குளத்தில் மார்ச் 5 ல் மாணவிகளை அழைத்துக் கொண்டு ஒரு கல்லுாரி பஸ் சென்றது. அவ்வழியாக​ஒரு இறுதி ஊர்வலம் நடந்தது. இதில் பங்கேற்றவர்களில் சிலர் போதையில் இருந்தனர். பஸ்சை சட்டவிரோதமாக மறித்து, மாணவிகளை ஆபாசமாக திட்டி, ஹெல்மெட், காலணிகளால் டிரைவரை தாக்கினர். பஸ்சிற்கு சேதம் விளைவித்தனர். சங்கர் உள்ளிட்ட சிலர் மீது பெருங்குடி போலீசார் வழக்கு பதிந்தனர். சங்கர், அஜித்குமார், சந்திரபோஸ் உயர்நீதிமன்றக் கிளையில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தனர்.




நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு: குற்றச்சாட்டுகள் தீவிரமானது. இச்செயல்களை சாதாரணமாக கருதிவிட இயலாது. இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பது சமூக, கலாசார நடைமுறையாக இருப்பினும், அது பொது பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பதற்கோ அல்லது வன்முறையில் ஈடுபடுவதற்கோ எவ்வித உரிமையையும் வழங்குவதில்லை. மனுதாரர்களை காவலில் எடுத்து விசாரிப்பது அவசியம். முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இறுதி ஊர்வலங்களின்போது, குறிப்பாக பொது சாலைகளை மறிப்பது, மக்களுக்கு இடையூறு விளைவிப்பது அதிகரித்து வருகிறது. இறுதிச் சடங்குகளை நடத்தும் உரிமை இந்திய அரசியலமைப்பு பிரிவின் கீழ் வரும் 'வாழ்வுரிமையின்' ஒரு பகுதியாக அமைந்திருப்பினும், பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு நலன் கருதி, அவ்வுரிமையானது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாகும்.

டி.ஜி.பி.,சுற்றறிக்கை



இறுதி ஊர்வலங்களில் பங்கேற்போரின் ஒழுங்கின்மையால் பல விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில் உயிரிழப்புகளும் அடங்கும். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து பிறப்பித்த உத்தரவு அடிப்படையில் தமிழக டி.ஜி.பி.,2024 ல் சுற்றறிக்கை வெளியிட்டார்.



அதன்படி வாகன போக்குவரத்து மற்றும் இறுதி ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தும் பொருட்டு, இறந்தவரின் குடும்பத்தினர் இறுதி ஊர்வலம் நடைபெறும் உத்தேச நேரம், வழித்தடம் குறித்து முன்கூட்டியே சம்பந்தப்பட்ட போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சிதறிக் கிடக்கும் மாலைகள் மற்றும் பிற பொருட்களை அகற்றுவதில் போலீசார் உள்ளாட்சி அமைப்பு நிர்வாகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.


இறுதிச் சடங்கு ஏற்பாட்டாளர்களிடம், மலர் மாலைகள் மற்றும் மலர் வளையங்களை இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்திலேயே சேகரித்து, அவற்றை அப்புறப்படுத்த அறிவுறுத்த வேண்டும். ஊர்வலத்தின்போது அதிக எண்ணிக்கையிலான மாலைகளை எடுத்துச் செல்லவோ அல்லது சாலைகள் அல்லது வாகனங்கள் மீது அவற்றை வீசவோ கூடாது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


சட்டம் தேவை




மேற்கண்டவாறு சுற்றறிக்கை வெளியிட்டபோதிலும், இறுதி ஊர்வலங்களின் போது ஒழுங்கீன சம்பவங்கள் தடையின்றி தொடர்கின்றன. மக்களுக்கு ஆபத்தை விளைவிப்பதாக உள்ளது.


பொது பாதுகாப்பு கருதி இறுதிச் சடங்கு ஊர்வலங்களை முறைப்படுத்துவதற்கான கட்டுப்பாட்டு மற்றும் தண்டனை விதிகளை உள்ளடக்கிய சட்டம் இயற்றுவதன் அவசியத்தை தமிழக அரசின் தலைமைச் செயலர் ஆய்வு செய்ய வேண்டும்.


அதே வேளையில், இறுதிச் சடங்குகளை நிறைவேற்றுவதற்கான அடிப்படை உரிமை எவ்விதத்திலும் தேவையின்றி சுருக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஜூலை 31 க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.

Advertisement