ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக என்.எல்.சி., ஊழியரிடம் ரூ. 87 லட்சம் மோசடி

புதுச்சேரி: ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக, என்.எல்.சி., ஊழியரிடம் ரூ. 87 லட்சம் மோசடி செய்த புதுச்சேரியை சேர்ந்த 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த ஊத்தாங்கால் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், 43; என்.எல்.சி.,யில் தற்காலிக ஊழியர். இவருக்கு, தனது உறவினர் கோபாலகிருஷ்ணன் மூலம் புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த சுவாமிநாதன் என்பவர் பழக்கமானார். அப்போது சாமிநாதன், கடந்த 2020ம் ஆண்டு தனக்கு மத்திய அமைச்சர்கள் நன்கு தெரியும், தபால் நிலையில் வேலை உள்ளது. தெரிந்தவர்கள் இருந்தால் வேலை வாங்கி தருவதாக கூறினார்.

இதை நம்பிய செந்தில்குமார், தனது மனைவிக்கு வேலை வாங்கி தருமாறு கூறி, ரூ. 3 லட்சம் கொடுத்தார். அடுத்த சில மாதங்களில் கொரோனா தொற்று காரணமாக வேலை தடைப்பட்டுள்ளது. ஆனால், ரயில்வேயில் ‘குரூப்–சி’ பணி அமைச்சர் கோட்டாவில் காலியாக உள்ளதாக கூறினார். அதனை நம்பிய செந்தில்குமார் தனது சகோதரியின் மகன் தமிழ்செல்வனுக்கு வேலை வாங்கிதரும்படி கேட்டு, பல்வேறு தவணைகளாக ரூ. 14 லட்சம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, தமிழ்செல்வனை டில்லிக்கு அழைத்து நேர்க்காணல், மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்த்தல் நடத்தி, சாமிநாதன் பணி நியமன கடிதம் வழங்கினார். அப்போது, மேலும், 4 பேருக்கு வேலை உள்ளதாகவும், தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லும்படி கூறினார். பணி நியமன கடிதம் வழங்கியதால், சாமிநாதனை நம்பிய செந்தில்குமார் தனது உறவினர்களின் மகன்கள் 4 பேருக்கும் வேலை வாங்கி தரும்படி, பல்வேறு தவணைகளாக ரூ. 70 லட்சத்தை, சாமிநாதன், அவரது மனைவி சலோமி செல்வராணி, அவரது உறவினர் ராஜசேகர், அவரது மனைவி நகோமி ஞானமணி, நண்பர் சிவராமன் ஆகியோரிடம் கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து, சாமிநாதன் பணம் கொடுத்த 4 பேரையும் டில்லிக்கு அழைத்து நேர்காணல், சான்றிதழ் சரிபார்த்தல் நடத்தி, அவர்களுக்கும் பணி நியமன கடிதம் வழங்கினார். அப்போது, அனைவருக்கும் தமிழகத்திலேயே இடமாற்றம் செய்து தருமாறும், அதுவரை பொருத்திருக்கும்படி கூறி அனுப்பி வைத்துள்ளார்.

பின், செந்தில்குமார் வேலை குறித்து கேட்கும் போதெல்லாம், சாமிநாதன் ஏதேதோ காரணங்களை கூறி காலம் கடத்தி வந்தார். சந்தேகமடைந்த செந்தில்குமார் பணி ஆணைகள் பற்றி ரயில்வேயில் விசாரித்தபோது, அவை அனைத்தும் போலி என்பது தெரியவந்தது.

திடுக்கிட்ட செந்தில்குமார், சாமிநாதனிடம் கேட்டபோது, ரூ.87 லட்சத்திற்கு ‘செக்’ கொடுத்துள்ளார். அவை அனைத்து பணமின்றி திரும்பியது. இதனிடையே சாமிநாதன் தலைமறைவானார்.

இதுகுறித்து செந்தில்குமார் புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் அளித்தார். மனுவை, விசாரித்த சி.பி.சி.ஐ.டி., போலீசார், மோசடி தொகை ஒரு கோடி ரூபாய்க்கு குறைவாக உள்ளதால், லாஸ்பேட்டை போலீசாரே விசாரிக்க பரிந்துரை செய்தனர். அதன்பேரில் லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார், சாமிநாதன், அவரது மனைவி சலோமி செல்வமணி, ராஜசேகர், அவரது மனைவி நகோமி ஞானமணி, நண்பர் சிவராமன் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிந்து, அவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement