மீட்டெடுக்க முயற்சி!
புதைந்து கிடக்கும் வரலாற்று சுவடுகளை... ஆவணப்படுத்தும் வரலாற்று ஆய்வு நடுவத்தினர்
ஆனைமலை: வணிக சந்தையாகவும், கொங்கு மண்டலத்தின் வரலாற்று மையமாகவும் உள்ள ஆனைமலையில் வரலாற்று சுவடுகளை மீட்டெடுத்து வருங்கால சந்ததிகளுக்கு தெரிவிக்க ஆவணப்படுத்தும் பணியை, உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் மேற்கொண்டுள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஆனைமலை இயற்கை வளம் நிறைந்து காணப்படுகிறது. பசுமையான நெல்வயல்கள், ஆழியாறு, உப்பாறு மற்றும் உப ஆறுகள் என மனதுக்கும் கண்களுக்கும் விருந்தளிக்கும் இடமாக உள்ளது.
இயற்கைக்கு பெயர் பெற்ற ஆனைமலை, வரலாற்று பொக்கிஷங்களை உள்ளடக்கியுள்ளது. இங்கு மன்னர்கள், ஜமீன்தாரர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள், அவர்கள் ஆட்சி செய்த ஊர்களின் பெயரே அதற்கு சான்றாக உள்ளன.
ஆனைமலை பகுதி பண்டைய காலத்தில் கேரளா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளை இணைக்கும் முக்கிய வணிகப் பாதையாக விளங்கியுள்ளது. இங்கு குதிரை வணிகம் மற்றும் பிற வணிகங்கள் நடைபெற்றதற்கான சான்றுகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன.
ஆனைமலை வரலாற்றை உள்ளடக்கி இருந்தாலும், அவற்றை மீட்டெடுக்க விழிப்புணர்வு இல்லை. வரலாற்று சுவடுகளை மீட்டெடுத்து, அவற்றை ஆவணப்படுத்தும் பணியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து, உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் பணிகளை மேற்கொண்டுள்ளது.
முதற்கட்டமாக சேத்துமடையில், பெருங்கற்காலத்து சின்னங்களை கண்டறிந்து ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொல்லியல் ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி, வரலாற்று ஆய்வு நடுவத்தின் களப்பணியாளர்கள் அருட்செல்வன், சிவக்குமார் ஆகியோர் ஈடுபட்டனர்.
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் களப்பணியாளர் சிவக்குமார் கூறியதாவது:
மேற்கு தொடர்ச்சிமலை பகுதியில் உலக நாகரிகத்தின் கலாசார சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சேரர்கள் ஆட்சி செய்ததற்கான சான்றுகள், பதிற்றுபத்து பாடல்கள் இலக்கிய சான்றாக உள்ளது. அவ்வகையில், பொள்ளாச்சி, ஆனைமலை சங்க இலக்கியத்தில் நன்னன் ஆண்ட பகுதியாக கூறப்படுகிறது.
ஆழியாறு பெருநதியோடு கலக்கும் அன்னப்பாறை ஆற்றின் கரையோரத்தில் கற்திட்டைகளும், பெருங்கற்காலச்சினங்களை குறிக்கும் வகையில் கருப்பு, சிவப்பு ஓடுகளும், ஈமத்தாழி ஓடுகளும் ஆங்காங்கே கிடக்கின்றன.
கேரளா நாடு முதலில் சேர நாடாகவும், அயிரை மலையில் சேரன் செங்குட்டுவன் கொடி வழி உறவுகள் வழிபட்டமைக்கான பதிற்று பத்து பாடல்களும் சங்க இலக்கிய சான்றுகளாக உள்ளன. ஒன்பது கரை நாடு எனவும், கரை வளிநாடு எனவும் சொல்லக்கூடிய கரைவளப்பகுதியில், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்தற்கான கல்வெட்டு சான்றுகளும்,தொல்லியல் சான்றுகளும் ஆங்காங்கே கிடைத்துள்ளன.
அதில், சேத்துமடை, காளியாபுரம் பகுதிகள், ஈராயிரம் முற்பட்ட பகுதிகள் என தெரிகிறது. அந்த காலத்தில் மக்கள் வசித்ததற்கான சான்றுகளே இந்த கருப்பு, சிவப்பு ஓடுகள், ஈமத்தாழி சின்னங்களாகும். நீரோடை பகுதியாக இருப்பதாலும், கரைவளிப்பகுதியில் இருப்பதாலும், இவ்வளவு ஆண்டுகளுக்கு பிறகும் பெருங்கற்காலத்தாழி பாதுகாக்கப்படுகிறது. சேத்துமடை வரலாற்று ஆர்வலர் அந்தோணி இதை பாதுகாத்து வருகிறார்.
காளியாபுரத்தில், கற்திட்டதை கண்டறியப்பட்டது. ஆனைமலை பெருமாள்சுவாமி கரடு பகுதியில், திப்பு சுல்தான் காலத்து வாள்கள் கண்டறியப்பட்டன. இவை தொல்லியல் துறைக்கு முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனைமலை பகுதி வரலாற்று பொக்கிஷங்களை உள்ளடக்கியுள்ளது. கல்வெட்டுகள், சிற்பங்கள் என கண்டறிந்து அவற்றை ஆவணப்படுத்த வேண்டும்.
இது குறித்து, இப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சிற்பங்கள், கல்வெட்டுகள் இருப்பதை பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கண்டறிய வேண்டும்.
தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பில், இப்பகுதியில் அகழ்வாய்வு செய்தால், ஏராளமான தொல்லியல் சின்னங்கள் கிடைக்க வாய்ப்புள்ளன. பழங்கற்கால சின்னங்களை கண்டறிந்து ஆவணப்படுத்துவதால், வருங்கால சந்ததிகளுக்கு நமது முன்னோர்களின் வீரம், கலை, அறிவு என திறமைகள், அவர்கள் வரலாறு பற்றி தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும்
-
ரூ.11 கோடி போதை பொருள் கடத்திய 2 பெண்கள் கைது
-
வேன் மீது பஸ் மோதி விபத்து குஜராத்தில் 6 பெண்கள் பலி
-
'பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு இனி எதிர்காலம் இல்லை'
-
நடுவானில் எரிபொருள் பற்றாக்குறை 'ஏர் இந்தியா' விமானம் தரையிறக்கம்
-
ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவப்படி இனி நேரடியாக வங்கி கணக்குக்கு வந்துவிடும் ஓய்வூதிய விதிகளில் அதிரடி மாற்றம்
-
கிரேட்டர் நிக்கோபர் திட்டத்துக்கு ராகுல் எதிர்ப்பு தேசிய பாதுகாப்பை மீண்டும் சீர்குலைக்க காங்., முயற்சி?