திருத்தணி கோவிலில் முடிகாணிக்கை மண்டபம் விரிவுபடுத்த வேண்டும்: பக்தர்கள் எதிர்பார்ப்பு

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் முடி காணிக்கை செலுத்தும் மண்டபத்தில் பக்தர்கள் அதிகளவில் குவிவதால், இடநெருக்கடியால் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, முடி காணிக்கை மண்டபத்தை விரிவுபடுத்த வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உட்பட அண்டை மாநிலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மூலவரை தரிசித்து செல்கின்றனர். சில பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இதற்காக, கோவில் நிர்வாகம் சார்பில் மலைக்கோவில் படாசெட்டிக்குளம் அருகே, ஆறு ஆண்டுகளுக்கு முன் 1 கோடி ரூபாய் மதிப்பில் முடி காணிக்கை மண்டபம் கட்டப்பட்டது.

இரண்டு அடுக்கு கட்டடத்தில், முதல் தளத்தில் பக்தர்கள் மொட்டை அடிப்பது மற்றும் குளியல் அறைகளும், இரண்டாவது தளத்தில் பக்தர்கள் குறியலறை மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாக முடி காணிக்கை செலுத்தும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கிருத்திகை, வார விடுமுறை நாட்கள் மற்றும் திருமண முகூர்த்த நாட்களில் அதிகளவில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகின்றனர். இதுபோன்ற நாட்களில் பக்தர்கள் மொட்டை அடிப்பதற்கு மண்டபத்தில் குவிவதால், கடும் இடநெருக்கடி ஏற்படுகிறது. இதனால், ஊழியர்கள் அரைகுறையாக மொட்டை அடிக்கின்றனர்.

எனவே, ஹிந்து அறநிலைய துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, முடி காணிக்கை மண்டபத்தை விரிவுபடுத்தி, போதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement