புதுச்சேரியில் அதிகபட்சமாக 91.81 சதவீத மூன்றாம் பாலினத்தவர் ஓட்டுப்பதிவு

புதுச்சேரி: சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அதிக பட்சமாக, மூன்றாம் பாலின வாக்காளர்கள், 91.81 சதவீதம் பேர் ஓட்டு போட்டுள்ளனர்.

மூன்றாம் பாலினத்தவரை, பிறர் என்ற பிரிவின் கீழ் வாக்காளர்களாக வகைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தலைமை தேர்தல் கமிஷனராக நவீன் சாவ்லா இருந்தபோது அமல்படுத்தினார்.

இதையடுத்து, ஆண்கள், பெண்கள் என்பதுடன், 'பிறர்' என்ற பிரிவில் மூன்றாம் பாலினத்தவர் வாக்காளர்களாக வகைப் படுத்தப்பட்டுள்ளனர்.

கேரளா, அசாம், புதுச்சேரியில் கடந்த 9ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது.

தமிழகத்தில் கடந்த 23ல் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. மேற்கு வங்கத்தில் முதற்கட்டமாக, 23ம் தேதி தேர்தல் நடந்தது. இன்று இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இந்நிலையில் புதுச்சேரி மற்றும் நான்கு மாநிலங்களில் பதிவான ஓட்டு விபரங்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

புதுச்சேரியில் மூன்றாம் பாலின வாக்காளர்கள் , 139 பேர் உள்ளனர். இதில், 91.81 சதவீதம் பேர் ஓட்டு போட்டுள்ளனர். ஐந்து மாநிலங்களில் புதுச்சேரியில் தான் இந்த பிரிவினர் அதிகபட்சமாக ஓட்டு போட்டனர்.

இதே போல் தமிழகத்தில், 7,728 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர். இதில், 60.49 சதவீத ஓட்டுகள் பதிவாகின. மேற்கு வங்கத்தில் 23ம் தேதி நடந்த முதற்கட்ட தேர்தலில், மொத்தமுள்ள 465 மூன்றாம் பாலின வாக்காளர்களில் 56.79 சதவீதம் பேர் ஓட்டு போட்டனர்.

அசாமில், 343 மூன்றாம் பாலின வாக்காளர்களில், 36.84 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளன. கேரளாவில், 277 மூன்றாம் பாலின வாக்காளர்களில், 57.04 சதவீதம் பேர் ஓட்டு போட்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement