வெப்ப அலையில் இருந்து மக்களை காக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
புதுடில்லி: 'நம் நாட்டில் வெப்ப அலையால் பாதிப்புக்கு உள்ளாகும் மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் மற்றும் உரிய நிவாரணங்களை தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங் கானா உட்பட, 21 மாநில அரசுகள் மற்றும் டில்லி நிர்வாகம் ஆகியவை மேற்கொள்ள வேண்டும்' என, தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோடை காலத்தில் ஏற்படும் வெப்ப அலைகளின் தீவிரம் மற்றும் அதன் தாக்கத்தால், விளிம்புநிலை மக்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர், திறந்தவெளியில் பணிபுரியும் தொழிலாளர்கள், வீடற்ற மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
கடும் வெப்பம் காரணமாக முதியோர், குழந்தைகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. இதுதவிர, கூடுதலாக வெப்ப அலைகளின் தாக்கம் காரணமாக வாழ்வாதார இழப்புகளுடன் தீ விபத்து போன்ற அபாயங்களும் அதிகரித்துள்ளன.
எனவே, இதை கருத்தில் வைத்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம், அனைத்து மாநிலங்கள் மற்றும் டில்லி யூனியன் பிரதேச தலைமைச் செயலர்களுக்கு கடிதம் எழுதிஉள்ளது.
அதன் விபரம்:
கடும் வெப்பம் காரணமாக, கடந்த 2019 - 23ம் ஆண்டுகளுக்கு இடையே 3,712 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. எனவே, இதனால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும், உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கவும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் அல்லது ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையான செயல்பாட்டு முறையின்படி, நிவாரண நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும்.
அந்தந்த மாநில அரசுகள் தங்கள் மாவட்ட நிர்வாகங்களிடமிருந்து, வெப்ப அலைகளால் ஏற்படும் தாக்கத்தை குறைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள ஒட்டுமொத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
தமிழகம், ஆந்திரா, அசாம், பீஹார், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ஒடிஷா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தெலுங்கானா, திரிபுரா, உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
@block_B@ 13 நகரங்களில் வெயில் சதம் தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, சென்னை உட்பட 13 நகரங்களில், வெயில் 100 டிகிரி பாரன்ஹீட், அதாவது 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் பதிவானது. இதில் அதிகபட்சமாக, திருச்சியில், 40.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. இதற்கு அடுத்தபடியாக, சென்னை மீனம்பாக்கம், கோவை, தர்மபுரி, ஈரோடு, கரூர், மதுரை, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருப்பத்துார், திருத்தணி, வேலுார் ஆகிய நகரங்களில், 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.block_B
@block_B@ மாணவர்களுக்கு அறிவுறுத்தல்
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோருக்கு, தமிழக பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் வழங்கியுள்ள அறிவுரைகள்:
* மாணவர்கள், பகல் 12:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை, நேரடி வெயிலில் இருப்பதை தவிர்க்க வேண்டும். ஆசிரியர்கள் அந்த நேரத்தில், திறந்தவெளி வகுப்புகள், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளை வழங்கக் கூடாது
* ஆசிரியர்கள், ஒவ்வொரு பாடவேளை தொடக்கத்திலும், மாணவர்கள் நீர் அருந்த வாய்ப்பு வழங்குவதுடன், அவர்கள் போதுமான அளவு, தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும்
* காபி, கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் அதிக சர்க்கரை உள்ள பானங்களைத் தவிர்க்க வேண்டும்
* பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணியர், முதியோர் மற்றும் இதய நோய் பாதிப்புள்ளோர், வெயிலில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
* கோடை காலத்தில் தலைவலி, தலைசுற்றல், வாந்தி, தசைப்பிடிப்பு, அதிக இதயத்துடிப்பு மற்றும் மயக்கம் போன்றவை, வெப்ப பாதிப்பின் அறிகுறிகளாக வெளிப்படும்.
இதுபோன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் அல்லது 108 அவசர சிகிச்சை உதவியை நாட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. block_B
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement