தேர்தல் பணிகளில் தி.மு.க.,வினர் 'சொதப்பல்' :மாவட்ட நிர்வாகிகளை மாற்ற ஸ்டாலின் முடிவு
- நமது நிருபர் -
சட்டசபை தேர்தலில், வேட்பாளர்களிடம் பணம் கேட்டு நெருக்கடி செய்த தி.மு.க., நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் பரிந்துரையால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால், இனி கட்சி நிர்வாகிகளை நியமனம் செய்யாமல், உட்கட்சி தேர்தல் நடத்தி, தகுதியானோரை தேர்வு செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட, 234 தொகுதிகளின் ஓட்டுப்பதிவு விபரம், தேர்தல் பணி விபரம் குறித்து வேட்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்களிடம், முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்துள்ளார். கொடைக்கானில் அவர் ஓய்வு எடுத்தாலும், வெற்றி வாய்ப்பு குறித்து, வேட்பாளர்களிடம் நேரடியாக பேசி வருகிறார்.
அப்போது, அவரிடம் வேட்பாளர்கள் சிலர், கட்சி நிர்வாகிகள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததை குற்றச்சாட்டாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக, மாவட்டச் செயலர்கள் பரிந்துரையால் நியமிக்கப்பட்ட அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர செயலர்கள் மீது, வேட்பாளர்கள் பலர் புகார் கூறியுள்ளனர்.
மேலும், ஆட்சி காலத்தில் ஆதாயம் பெற்ற நிர்வாகிகள் பலர், தேர்தல் பணிகளில் சொதப்பிய தகவலும், முதல்வரின் கவனத்துக்கு சென்றுள்ளது. இதனால், 'கட்சியில் இனிமேல் நியமனத்திற்கு இடம் கொடுக்காமல், ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தி, அனைத்து மட்டங்களிலும் நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும். அப்போது தான் கட்சியின் கட்டமைப்பு பலப்படும்' என, தனக்கு நெருக்கமானோரிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
ஊராட்சி தலைவர், கவுன்சிலர் பதவிகளில் உள்ள தி.மு.க., நிர்வாகிகள் மீதான அதிருப்தியால், தேர்தல் பணிகளில் தொண்டர்கள் ஆர்வம் காட்டவில்லை. கட்சி பதவிகளில் ஆண்டாண்டு காலமாக கோலோச்சி வருபவர்களும், தேர்தல் பணிகளில் முழுமையாக கவனம் செலுத்தவில்லை. தங்கள் வாரிசுகள் த.வெ.க.,விற்கு ஓட்டு போட்டிருப்பதையும் அவர்களால் தடுக்க முடியவில்லை.
மாவட்ட செயலர்களால் நியமிக்கப்பட்டோர், தொகுதி வேட்பாளருக்கு சரிவர வேலை செய்யாமல், மாவட்ட செயலர் போட்டியிடும் தொகுதிக்கு சென்று தேர்தல் பணியாற்றி உள்ளனர்.
இதுபோல தி.மு.க.,வினரின் உள்ளடி வேலைகளால், ஓட்டுகள் த.வெ.க.,விற்கு சாதகமாக திரும்பியுள்ளன. கடந்த 1992ம் ஆண்டில் நடந்த உட்கட்சி தேர்தலில், வைகோ ஆதரவாளர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றனர். எனவே, அதன் பின் நடந்த உட்கட்சி தேர்தல்கள், பெயரளவிற்கே நடத்தப்பட்டன. மாவட்ட செயலர்கள் தரப்பில் பரிந்துரை செய்யப்படுவோரே, நிர்வாகிகளாக நியனம் ஆகினர். இதனால், கட்சிக்கு விசுவாசமாக செயல்படும் நிர்வாகிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இவற்றின் காரணமாகவே, தேர்தல் முடிவுக்கு பின், கட்சியை பலப்படுத்தும் பணிகளில், நேரடி கவனம் செலுத்த, ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
***
மேலும்
-
மே 1, 4ல் 'டாஸ்மாக்' விடுமுறை
-
வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 சரிவு
-
போலீஸ் அதிகாரிகள் வேறு பணிகளில் தீவிரம் மீண்டும் தலை துாக்கும் கொலை சம்பவங்கள்
-
முருகன் மீது முழு நம்பிக்கை: விஜய் கடிதம்
-
வெப்ப அலையில் இருந்து மக்களை காக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
-
புதுச்சேரியில் அதிகபட்சமாக 91.81 சதவீத மூன்றாம் பாலினத்தவர் ஓட்டுப்பதிவு