ஓரிக்கை பணிமனை வளாகத்திற்கு ‛கான்கிரீட்’ தரை தளம் அமைப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மண்டலம், அரசு போக்குவரத்து கழகம், ஓரிக்கை பணிமனை எண் 1, வளாகத்திற்கு கான்கிரீட் தரைதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

அரசு போக்குவரத்து கழகம், காஞ்சிபுரம் மண்டலம், ஓரிக்கை பணிமனை எண் 1ல் இருந்து பல்வேறு பகுதிக்கு 55 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இங்கு நடத்துனர்கள், ஓட்டுனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் என, 250க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இருப்பினும் பணிமனை வளாகம் மண் தரையாகவே இருந்து வந்தது.

மழைகாலத்தில் பணிமனை வளாகம் சகதியாக மாறிவிடுவதால், வாட்டர் சர்வீஸ் முடித்து, புதிதாக வரும் பேருந்துகள் பணிமனை வளாகத்தில் உள்ள சகதியில் செல்லும்போது, மீண்டும் அழுக்கு படிந்த பேருந்தாக மாறிவிடும்.

இதனால், ஓரிக்கை பணிமனை வளாக தரைக்கு கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து பணிமனை தரைக்கு கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதுகுறித்து அரசு போக்குவரத்து கட்டுமான பிரிவு பொறியாளர் ஒருவர் கூறுகையில், ‘காஞ்சிபுரம் ஓரிக்கை பணிமனை எண் 1, தரைப்பகுதி மண்தளமாக இருந்து வந்தது. தற்போது 80 அடி நீளம், 40 அடி அகலத்திற்கு, 3 லேயர்களாக 6 இன்ச் உயரத்திற்கு கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது’ என்றார்.

Advertisement