பஞ்சாப் ரன் குவிப்பு: ராஜஸ்தான் அணிக்கு 223 ரன்கள் வெற்றி இலக்கு


நியூ சண்டிகர்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான டி-20 போட்டியில் பஞ்சாப் அணி 222 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து ராஜஸ்தான் அணிக்கு 223 ரன்கள் வெற்றி இ லக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பிரீமியர் லீக் 2026 சீசனின் 40வது லீக் போட்டியில் இன்று (ஏப்ரல் 28) பஞ்சாப் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி நியூ சண்டிகரில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. ஷிம்ரன் ஹிட்மெயர் மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோருக்குப் பதிலாக தசுன் ஷனகா மற்றும் யஷ் ராஜ் புஞ்சா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. சஷாங்க் சிங் மற்றும் ஜேவியர் பார்ட்லெட் ஆகியோருக்குப் பதிலாக சூர்யான்ஷ் ஷெட்கே மற்றும் லாகி பெர்குசன் அணியில் இடம்பெற்றனர்.

முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி துவக்க வீரர்கள் பிரப்சிம்ரன் சிங், ப்ரியான்ஸ் ஆர்யா நல்ல துவக்கம் தந்தனர். இதில் ப்ரியான்ஸ் ஆர்யா 29 ரன்கள் எடுத்திருந்த போது ஆர்ச்சர் பந்தில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து பிரப்சிம்ரன் சிங் அரைசதம் கடந்தார். அவர் 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த கூப்பர் 30 ரன்களும் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 30 ரன்களும் சேர்த்து அவுட் ஆகினர். அடுத்து வந்த மார்கஸ் ஸ்டாய்னிஸ் அதிரடியாக விளையாடி, 4 பவுண்டரிகளும் 6 சிக்ஸர்களும் அடித்து அரைசதம் கடந்தார். ஸ்டாய்னிஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 62 ரன்களும் சூர்யான்ஸ் 3 ரன்களுடன் இருக்க பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியின் யாஷ் ராஜ் 2 விக்கெட்டுகளையும் பர்ஜர், ஆர்ச்சர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் ராஜஸ்தான் அணிக்கு 223 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Advertisement