நிர்வாணமாக இளம்பெண் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு கொலையா என விசாரணை

ஆடுகோடி: வீட்டிற்குள் நிர்வாணமாக அழுகிய நிலையில், இளம்பெண் உடல் கண்டெடுக்கப்பட்டது. கொலையா, தற்கொலையா என, விசாரணை நடக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தை சேர்ந்தவர் பூஜா தத்தா, 33. இவருக்கு திருமணம் ஆகவில்லை. பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். மூன்று ஆண்டுகளாக ஆடுகோடியில் வாடகை வீட்டில் வசித்தார். நேற்று முன்தினம் மாலை, பூஜா வசித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் ஜனகம்மாவுக்கும், ஆடுகோடி போலீசாருக்கும் அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.

வீட்டு உரிமையாளர் மற்றும் போலீசார் வந்து கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, உடல் அழுகி நிர்வாண நிலையில் பூஜா இறந்து கிடந்தார். அவரது உடல் கிடந்த இடத்தில் ரத்த கறையும் படிந்து இருந்தது.

பூஜா உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வீட்டின் சுவரில் ஒட்டப்பட்டு இருந்த துண்டு பேப்பர்களில், ஏதேதோ எழுதப்பட்டு இருந்தது. பூஜா தற்கொலை செய்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவில்லை.

வீட்டு உரிமையாளர் ஜனகம்மா கூறுகையில், ''என் வீட்டில் மூன்று ஆண்டுகளாக பூஜா வாடகைக்கு இருந்தார். அவருக்கு திருமணமாககவில்லை. பெரும்பாலும் அவர் ஹிந்தியில் தான் பேசுவார். வீட்டில் இருந்து அவ்வளவாக வெளியே வரவே மாட்டார்.

அவரை சந்திக்க அவ்வப்போது ஒரு வாலிபர் வருவார். அவர் வரும் நேரம் எல்லாம், இருவருக்கும் இடையே சண்டை நடக்கும். பின், அந்த வாலிபர் அங்கிருந்து சென்று விடுவார். கடைசியாக பூஜாவை, ஐந்து நாட்களுக்கு முன்னர் தான் பார்த்தேன்,'' என்றார்.

பூஜாவை யாராவது பார்த்தால், அவர்களை நோக்கி திட்டியபடி செல்வார்; சாலையில் நடந்து செல்லும் போது தனியாக பேசுவார் என்று, அப்பகுதியில் வசிக்கும் சிலர் கூறினர். இதனால், அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது. பூஜாவுக்கு வந்த தொலைபேசி அழைப்புகள், அவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் வாலிபர் யார் என்று, போலீசார் விசாரிக்க ஆரம்பித்து உள்ளனர்.

Advertisement