'பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு இனி எதிர்காலம் இல்லை'

புதுடில்லி: ''நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு இனி எதிர்காலம் இல்லை. வாகன உற்பத்தியாளர்கள் உடனடியாக பசுமை எரிசக்திக்கு மாற வேண்டும்,'' என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சருமான நிதின் கட்கரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

காற்று மாசுபாடு தலைநகர் டில்லியில் நடந்த, 'பஸ் வேர்ல்டு இந்தியா - 2026' உச்சி மாநாட்டில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:

வாகன உற்பத்தியாளர்களும், போக்குவரத்து நிறுவனங்களும் பசுமை எரிசக்தியை நோக்கி தங்களது பயணத்தை விரைவுபடுத்த வேண்டும்.

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு இனி எந்த எதிர்காலமும் இல்லை. டில்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக நம் நாடு செலவிடும் கோடிக்கணக்கான ரூபாய் ஆகியவற்றை கருதி, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்கள் தற்போது நகரங்களுக்குள் பிரபலமடைந்து வரும் நிலையில், கனரக வாகனங்கள் மற்றும் நீண்ட துார பயணங்களுக்கு, ஹைட்ரஜன் மட்டுமே சிறந்த தீர்வாக இருக்கும்.

டில்லி - ஆக்ரா, மும்பை - -புனே உட்பட, 10 முக்கிய வழித்தடங்களில் ஹைட்ரஜன் பஸ்கள் மற்றும் லாரிகளின் சோதனை ஓட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளது.

இதில், 'டாடா மோட்டார்ஸ், அசோக் லேலண்டு, வோல்வோ' போன்ற முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

பேட்டரி வாகனங்களை விட, ஹைட்ரஜன் வாகனங்கள் நீண்ட துாரம் செல்லும் திறன் கொண்டவை என்பதோடு, எரிபொருள் நிரப்பும் நேரமும் மிகக் குறைவு. ஹைட்ரஜன் தான் எதிர்காலத்திற்கான எரிபொருள்.

அவசியம் ஹைட்ரஜன் தவிர, எத்தனால், மெத்தனால், சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு, எல்.என்.ஜி., எனப்படும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஆகியவற்றை உள்ளடக்கிய பன்முக அணுகுமுறையை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது.

சுற்றுச்சூழலை பாதுகாப்பது மட்டுமல்ல; நாட்டின் பொருளாதார பாதுகாப்பிற்கும் இறக்குமதி எரிபொருட்களை சார்ந்திருப்பதை தவிர்ப்பது அவசியம்.

இவ்வாறு அவர் பேசினார்.

@block_B@ பெட்ரோலில் எத்தனால் கலப்பை அதிகரிக்க மத்திய அரசு வரைவு அறிக்கை வெளியீடு எதி ர்காலத்தில் எத்தனால் கலப்பை படிப்படியாக அதிகப்படுத்த, மோட்டார் வாகன சட்டம், 1988ன் கீழ் உள்ள மோட்டார் வாகன விதிகள், 1989ல் புதிய திருத்தங்கள் செய்து, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம், வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. வரைவு அறிக்கையில் இடம் பெற்றுள்ள புதிய விதிகள்: எரிவாயு நிர்ணய விதிகளின்படி, 'இ10' என்ற 10 சதவீதம் எத்தனால் கலப்பு பெட்ரோலுடன், 'இ20' என்ற, 20 சதவீத எத்தனால் கலப்பு பெட்ரோல் இணைப்பு 85 சதவீத எத்தனால் கலப்பு பெட்ரோலுடன், 100 சதவீதம் எத்தனால் எரிவாயு புதிதாக சேர்ப்பு 3,000 கிலோவாக இருந்த இலகுரக வாகனங்கள் எடை வரம்பு தற்போது 3,500 கிலோவாக அதிகரி ப்பு சி.என்.ஜி., எரிவாயுவில் ஹைட்ரஜன் கலப்பு தெளிவுபடுத்தப்பட்டது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிக எத்தனால் கலப்பு எரிவாயு வாயிலாக, உற்பத்தியாளர்கள் வாகன சோதனைகளை மேற்கொள்ள, இந்த வரைவு உதவும் என வாகன நிபுணர்கள் தெரிவித்தனர். பொதுமக்கள் மற்றும் இத்துறை சார்ந்தவர்கள், வரைவு அறிக்கை தொடர்பாக, தங்கள் கருத்துகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வரும் கருத்துகளை ஆய்வு செய்து, திருத்தங்கள் இறுதி செய்யப்பட்டு, இறுதி அறிக்கை விரைவில் அரசிதழில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.block_B

Advertisement