97 பூத்களில், 90 சதவீதம் ஓட்டுப்பதிவு

பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட, 97 ஓட்டு சாவடிகளில், 90 சதவீதத்துக்கு மேல் ஓட்டு பதிவாகி உள்ளது.

கவுண்டம்பாளையம் தொகுதியில், 547 ஓட்டு சாவடிகள் உள்ளன. இதில், மலையோர கிராமங்களில் உள்ள, 15க்கும் மேற்பட்ட ஓட்டு சாவடிகளுக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பெரியநாயக்கன்பாளையம் மற்றும் எஸ்.எஸ். குளம் ஒன்றியம், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கவுண்டம்பாளையத்தின் வடக்கு பகுதி ஆகியவை இத்தொகுதியில் உள்ளடங்கி உள்ளது.

தற்போது கோடை காலம் என்பதால், கவுண்டம்பாளையம் மட்டுமல்லாமல், அனைத்து தொகுதிகளிலும், காலை முதலே ஓட்டுப்பதிவு விறு,விறுப்பாக நடந்தது. குறிப்பாக, இளம் தலைமுறையினர் ஓட்டுப்பதிவில் அதிக ஆர்வம் காட்டினர்.

கவுண்டம்பாளையம் தொகுதியில் உள்ள, 546ஏ ஓட்டு சாவடியில், 630 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 627 வாக்காளர்கள் தங்களது ஓட்டுக்களை பதிவு செய்தனர். இங்கு மட்டும் ஓட்டு பதிவு, 99.52 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 97 ஓட்டு சாவடிகளில், 90 சதவீதத்துக்கு மேல் ஓட்டு பதிவாகி உள்ளது. இத்தொகுதியில் மொத்த வாக்காளர்கள், 4 லட்சத்து, 22 ஆயிரத்து, 138. இதில், 3 லட்சத்து, 61 ஆயிரத்து, 29 பேர் தங்களுடைய ஓட்டுக்களை பதிவு செய்துள்ளனர். இத்தொகுதியில் ஓட்டுப்பதிவு, 85.52 சதவீதமாக பதிவாகியுள்ளது.



Advertisement