மின்வாரிய அலுவலகத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

சிங்கபெருமாள் கோவில்:சிங்கபெருமாள் கோவில் மின் வாரிய அலுவலகத்தில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சிங்கபெருமாள் கோவில் மின் வாரிய அலுவலகம், சந்தைமேட்டுத் தெருவில் பொது நூலகம் எதிரில் உள்ள தனியார் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.

இதன் கீழ் சிங்கபெருமாள் கோவில், செங்குன்றம், கருநிலம், கொண்ட மங்கலம், ஆப்பூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது.

இங்குள்ள குடியிருப்புகள், தொழிற்சாலைகள்‍, விவசாயம் வர்த்தக நிறுவனங்களுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த மின் வாரிய அலுவலகத்தில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி இல்லாததால் மின் வாரிய ஊழியர்கள் மற்றும் நுகர்வோர் அவதியடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து மின் நுகர்வோர் கூறியதாவது:

மின் கட்டணம் செலுத்தி மற்றும் மின் வினியோகம் தொடர்பான புகார்கள் தெரிவிக்க மின்வாரிய அலுவலகத்திற்கு செ ன்றால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. காலை 8:30 மணிக்கு வர வேண்டிய ஊழியர் 11:00 மணிக்கு வருகின்றனர்.

பெரும்பாலான மின் வாரிய ஊழியர்கள் குறித்த நேரத்தில் வருவதில்லை. அவர்கள் வரும்வரை காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது.

அத்துடன் இந்த அலுவலகத்தில் போதிய அளவு குடிநீர் வசதியும் இல்லை. கழிப்பறையும் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நுகர்வோர் மட்டுமின்றி மின்வாரிய ஊழியர்களும் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

மின் வாரிய அலுவலகத்தில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்தி உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement