கிணத்துக்கடவு தொகுதியின் 'கிங்' ஆகப்போவது யார்? தேர்தல் முடிவை அறிய கட்சியினர் ஆவல்

பொள்ளாச்சி: கிணத்துக்கடவு சட்டசபை தொகுதியானது, பொள்ளாச்சி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட, கிணத்துக்கடவு பேரூராட்சி மற்றும் ஒன்றியத்துக்கு உட்பட ஊராட்சிகள், மதுக்கரை தாலுகா, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட போத்தனுார், சுந்தராபுரம், குறிச்சி பகுதிகளை உள்ளடக்கியது.

தொகுதி வரலாறு இந்த தொகுதியில், விவசாயம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சதாலைகள், சிறு, குறு தொழிற்சாலைகள் உள்ளன. கிராமம், நகரம், தொழிற்சாலைகள் நிறைந்த தொகுதியாக உள்ளது. தொகுதியின் பெயர் தான் கிணத்துக்கடவு; ஆனால், கோவை மற்றும் சுற்றுப்பகுதிகளே தொகுதியில் அதிகம் உள்ளன.

இந்த தொகுதியில், 1967 முதல், 2021 வரையான 13 சட்டசபை தேர்தல்களில், 4 முறை மட்டுமே தி.மு.க., வென்றுள்ளது. ஒன்பது முறை அ.தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க., சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் கண்ணப்பன் இருமுறையும், அ.தி.மு.க., சார்பில் நெகமம் கே.வி.கந்தசாமி மூன்று முறையும், முன்னாள் அமைச்சர் தாமோதரன் நான்கு முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 3,26,920 வாக்காளர்களில், 2,30,155 வாக்காளர்கள் ஓட்டளித்து, 70.4 சதவீதம் ஓட்டுப்பதிவானது. அதில், அ.தி.மு.க., வேட்பாளர் தாமோதரன் - 1,01,537 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க., வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் - 1,00,442 ஓட்டுகள் பெற்று, 1,095 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

ஓட்டுப்பதிவு அதிகரிப்பு தற்போது, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியால், இறந்தவர்கள் பெயர், இரட்டை பதிவு, இடம் பெயர்ந்தவர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டது. இதனால், வாக்காளர் எண்ணிக்கை குறைந்தது.

2026 தேர்தலில், மொத்தம் உள்ள, 3,05,878 வாக்காளர்களில், 2,66,349 பேர் ஓட்டளித்து, 87.08 சதவீதம் ஓட்டுப்பதிவானது. கடந்த, 2021 தேர்தலை விட, 36,194 பேர் அதிகமாக ஓட்டளித்துள்ளனர்.

தி.மு.க., சார்பில் சபரி கார்த்திகேயன் வேட்பாளரானார். இவர், இதே தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக இருந்த கே.வி.கந்தசாமியின் பேரன் ஆவார்.

அ.தி.மு.க., சார்பில், முன்னாள் அமைச்சரும், இதே தொகுதியில் நான்காவது முறையாக எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்ற தாமோதரன் வேட்பாளரானார். இவர்களுடன், நாம் தமிழர் கட்சி சார்பில் பானுபிரியா, த.வெ.க., சார்பில் விக்னேஷ் உட்பட ஐந்து பேர் போட்டியிட்டனர்.

தீவிர பிரசாரம் இந்த தேர்தலில், அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை முன்னிலை படுத்தியும், தி.மு.க., ஆட்சியில் மக்களின் துயரத்தை பட்டியலிட்டும் அ.தி.மு.க., வேட்பாளர் பிரசாரம் செய்தார். தொகுதிக்குள் தனக்குள்ள அனுபவம், கூட்டணி கட்சியினரை ஒருங்கிணைத்து தேர்தல் பணியாற்றினார்.

தி.மு.க., வேட்பாளர், கட்சியின் தேர்தல் அறிக்கையை முன்னிலை படுத்தியும், ஐந்து ஆண்டு கால திட்டங்களை தெரிவித்தும், ஓட்டு சேகரித்தார். முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதால், ஜெயிக்க வேண்டும் என்ற ஆர்வ த்துடன் கூட்டணி கட்சியினரை ஒருங்கிணைத்து பணியாற்றினார்.

த.வெ.க., வேட்பாளர் விஜயின் தீவிர ரசிகராக இருந்து, வேட்பாளராகி உள்ளார். இதனால், முதல்முறை வாக்காளர்கள், விஜய் ரசிகர்களை மையப்படுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். இதனால், மும்முனைப்போட்டி ஏற்பட்டது.

வெல்லப்போவது யார்? இதை சமாளிக்க, தி.மு.க., - அ.தி.மு.க., சார்பில் ஓட்டுக்கு பணம் கொடுத்து வாக்காளர்களை வளைத்தனர். ஆனால், பணம் பெற்றவர்கள் யாருக்கு ஓட்டு போட்டார்கள் என்பதே இப்போதைய கேள்வி. இளைஞர்கள், பெண்கள் அதிகம் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர். எந்த கட்சியினரின் ஓட்டுகள் விஜய்க்கு அதிகம் விழுந்துள்ளது என்பது புரியாத புதிராக உள்ளது. தொகுதியை அ.தி.மு.க., தக்க வைத்துக்கொள்ளுமா, தி.மு.க., கைப்பற்றுமா என்பதை கணிக்க முடியாத நிலை உள்ளது.

அதனால், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் பதிவான ஓட்டு விபரங்களை கொண்டு, கட்சியினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். வரும், 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை முடிவை அறிய ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement