தமிழ் ஒருபோதும் என்னை கைவிடவில்லை பட்டிமன்ற பேச்சாளர் ஞானசம்பந்தன் பெருமிதம்

1

சென்னை: ''தமிழ் படித்தால் அனைத்தும் கிடைக்கும் என நம்பினேன். அதுபோல்தான் எல்லாம் நடக்கிறது. தமிழ் என்னை ஒருபோதும் கைவிடவில்லை,'' என, பட்டிமன்ற பேச்சாளர் கு.ஞானசம்பந்தன் தெரிவித்தார்.

பேனாக்கள் பேரவை சார்பில், 'கடந்து வந்த பாதை' எனும் நிகழ்ச்சித் தொகுப்பின்கீழ், பட்டிமன்றப் பேச்சாளர் ஞானசம்பந்தனோடு சிறப்பு சந்திப்பு மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நுாற்றாண்டு நுாலக வளாகத்தில் நேற்று நடந்தது.

இதில், பட்டிமன்றப் பேச்சாளர் கு.ஞானசம்பந்தன் பேசியதாவது:

மதுரை மாவட்டம், சோழவந்தான் எனும் ஊரில் பிறந்தேன். அங்குள்ள ஒரு பள்ளியில் படித்தேன். எனக்கு முதலில் வைத்த பெயர் அன்புசாமி. அதன் பின், ஞானசம்பந்தன் என பெயர் சூட்டப்பட்டது.

என் அப்பா ஒரு கண்டிப்பான அரசு ஆசிரியர். அவர் மீதான பயம் காரணமாகவே, விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு சென்றுவிடுவேன். எனக்கு அப்பாவும், குருவும் ஒன்று தான். அந்த வகையில், பள்ளியிலும், வீட்டிலும் கண்டிப்பு மிகுந்திருக்கும்.

தற்போதுள்ள பள்ளிக் கூடங்களில் முறைத்து பார்த்தாலே கொலை குற்றம் போல் கருதுகின்றனர். நான் 1970ல் பள்ளி படிக்கும்போது, இருந்த நடைமுறைகள் வேறு. அப்போது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை எனில், அனைத்து பாடங்களையும் மீண்டும் எழுத வேண்டும். இப்படியே பல ஆண்டுகள் கழிந்தன. ஆனாலும், என் அப்பா என்னை படிக்க வைத்தார்.

பின் பள்ளி படிப்பு முடித்து, கல்லுாரியில் முதுகலை தமிழ் படித்தேன். அதில், 'கோல்டு மெடல்' பெற்றேன். தொடர்ந்து எம்.பில்., - பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்புகளை படித்தேன்.

என் தந்தை எனக்கு பெண் பார்த்தார். ஆனால், என் திருமணத்திற்கு முன்பே அவர் இறந்துவிட்டார். என் அப்பாவின் மரணம் என்னை மிகவும் பாதித்தது.

அவருக்கு கொள்ளி வைக்கும்போது, என் அப்பாவுக்கு கொள்ளி வைக்கிறேன் என்பதை விட, ஒரு நுாலகத்திற்கு கொள்ளி வைக்கிறேன் என நினைத்து கைகள் நடுங்க வருந்தினேன்.

பின், என் அப்பா பார்த்த பெண்ணை திருமணம் செய்தேன். திருமணம் முடிந்து 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கல்லுாரியில் பேராசிரியராக பணி புரிந்தேன். பின் பட்டிமன்ற பேச்சாளர், நடுவராக பணியாற்றினேன்.

பின், சினிமாவுக்குள்நுழையும் வாய்ப்பு கிடைத்தது. பல விருதுகள் பெற்றுள்ளேன்.

தற்போது 'யு டியூப்' உள்ளிட்ட அனைத்து சமூக வலைதள பக்கத்திலும் பயணிக்கிறேன். தமிழ் படித்தால் அனைத்தும் கிடைக்கும் என நம்பினேன். அதுபோல்தான் எல்லாம் நடக்கிறது. தமிழ் என்னை ஒருபோதும் கைவிடவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, பேனாக்கள் பேரவை அமைப்பு சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பின், கு.ஞானசம்பந்தனுடன் கலந்துரையாடல் நடந்தது.

Advertisement