கோவிலுக்குள் நுழைய நாத்திகர் உரிமை கோர முடியுமா?: சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய கேள்வி

14

- டில்லி சிறப்பு நிருபர் -

“வட மாநிலத்தில் வசிக்கும் ஒரு நாத்திகர், தென்கோடியில் இருக்கும் ஒரு கோவிலுக்குள் நுழைய எப்படி உரிமை கோர முடியும்?” என சபரிமலை வழக்கில், உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளது.

சபரிமலை உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிராக காட்டப்படும் பாகுபாடுகள் மற்றும் மத சுதந்திரத்தின் எல்லைகள் குறித்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அடங்கிய ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. தொடர்ந்து 10வது நாளாக நேற்று விசாரணை நடந்தபோது, 2018ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஆதரித்து மூத்த வக்கீல் இந்திரா ஜெய்சிங் ஆஜரானார்.

அவர் வாதிடுகையில், “உச்ச நீதிமன்றம் 2018ல் அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி வழங்கியது. அதை ஏற்று பிந்து அம்மினி மற்றும் கனக துர்கா என்ற பெண்கள் சபரிமலைக்கு சென்றனர். அதில், ஒரு பெண் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். “அவரை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. தீண்டாமை அடிப்படையில் அவரை தடுப்பது அரசியல் சாசன பிரிவு 17ன் கீழ் குற்றம். “ஜாதி பாகுபாடு இல்லாமல் அனைத்து ஆண்களும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படும் நிலையில், பெண்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது,” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், அப்பெண் தடுத்து நிறுத்தப்படவில்லை. 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அனுமதி இல்லை என்ற வயது வரம்பு கட்டுப்பாடு காரண மாகவே அப்பெண் தடுத்து நிறுத்தப்பட்டார்' என பதில் அளித்தனர்.

அடிப்படை உரிமை





இதை ஆட்சேபிக்கும் வகையில் மூத்த வக்கீல் இந்திரா ஜெய்சிங் முன்வைத்த வாதம்: ஒரு பெண்ணின் வாழ்நாளில் மிகவும் ஆக்கப்பூர்வமான 10 முதல் 50 வயது வரையிலான காலகட்டத்தை முடக்குவது, அவரது அடிப்படை உரிமையை பறிப்பது போன்றது. பாதி வாழ்நாளை மட்டும் வாழுங்கள் என பெண்களுக்கு அறிவுறுத்த முடியுமா? 10 முதல் 50 வயது வரையிலான வாழ்க்கையை தவிர்த்து விடுங்கள். 10 வயதுக்குள்ளாகவும், 50 வயதுக்கு மேற்பட்டும் வாழுங்கள் என வாழ்க்கையை பிரித்து வாழச் சொல்ல முடியுமா? அது, அவர்களது வாழ்நாளை கணிசமாக இழக்க வைக்கும்.

கோவிலுக்குள் சென்று வழிபடுவது என்பது அனைவருக்குமான அடிப்படை உரிமை. அரசியல் சாசனத்தின் 25(1) பிரிவு அந்த உரிமையை வழங்கி இருக்கிறது.

போதிய பாதுகாப்பு





கடந்த 2018 தீர்ப்பை மதித்து இரு பெண்களும் சபரிமலை கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியதும், சிலர் தீட்டுப்பட்டு விட்டதாக கூறி, அவர் களது மனதை புண்படுத்தி விட்டனர். இது குறித்து, இதே நீதிமன்றத்தில் ஒரு மனுவை நான் தாக்கல் செய்துள்ளேன். அந்த சம்பவத்திற்கு பின், வேறு எந்த பெண்ணும் சபரிமலைக்கு செல்ல முயலவில்லை. அதற்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்காததே காரணம். பெண்கள் சபரிமலை கோவிலுக்கு சென்று வர போதிய பாதுகாப்பு வழங்க மாநில அரசு மறுத்துவிட்டது.

இது தொடர்பாகவும் ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன். அதில், அந்த பெண்கள் யார்? உண்மை யிலேயே அவர்கள் பக்தர்களா? எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற விபரங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கட்டத்தில் குறுக்கிட்ட நீதிபதி நாகரத்னா, “இந்த உரிமையை யார் கோரியது? ஒரு பக்தரிடம் இருந்து இந்த உரிமை கோரல் வந்ததா அல்லது நாத்திகரிடம் இருந்து வந்ததா; உரிமையை கோரச்சொல்லி துாண்டியது யார்?

“வட மாநிலத்தில் இருக்கும் ஒரு நபர், அதுவும் நாத்திகர் ஒருவர், தென் மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலின் ஆசாரங்களில் தலையிடவோ அல்லது நுழையவோ உரிமை கோருவதை நாம் பரிசீலிக்க வேண்டியுள்ளது,” என்றார்.

உள்நோக்கம்





நீதிபதி அசானுதீன் அமானுல்லா ஒரு தார்மீக கேள்வியை எழுப்பினார். “ஒருவர் கடவுள் மீது தீவிர நம்பிக்கை கொண்டவர் என கூறி, கோவிலுக்கு சென்று பக்தர்களின் பொதுவான உணர்வுகளை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டால், அது சரியாக இருக்குமா? அந்த செயல்பாட்டின் உள்நோக்கத்தையும் நாம் உற்று நோக்க வேண்டும் அல்லவா?” என்று கேட்டார்.

இதைத் தொடர்ந்து பேசிய நீதிபதி நாகரத்னா, “நம் நாடு பல்வேறு நம்பிக்கைகளை கொண்டது. பன்முகத்தன்மையே நம் நாட்டின் வலிமை. ஒவ்வொரு சமயப் பிரிவினருக்கு இருக்கும் உரிமைகளை பாதுகாப்பதன் மூலமே நாட்டில் ஒற்றுமையை நிலைநாட்ட முடியும். “எனவே, அந்தந்த சமய மரபுகளை நாம் மதிக்க பழக வேண்டும்,” என்றார்.

இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கும் என கூறிய நீதிபதிகள், அடுத்த விசாரணையை மே 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement