திருமா மீதான வழக்கு; ரத்து செய்தது ஐகோர்ட்

16

சென்னை: புதுச்சேரி கம்பன் கலை அரங்கத்தில், 2019ம் ஆண்டு நவம்பரில், வி.சி.க., மகளிர் அணி சார்பில் நடந்த நிகழ்ச்சியில், அக்கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர், ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில், வெறுப்பு கருத்துகளை தெரிவித்ததாக, ஹிந்து முன்னணி பொதுச்செயலர் டி.என்.கண்ணன் புகார் அளித்தார். அதன்படி, புதுச்சேரி ஒதியஞ்சாலை போலீசார், திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

புதுச்சேரி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் திருமாவளவன் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில், 'கல்விக்கு எதிரான சனாதன கொள்கை என்ற அடிப்படையில் தான் திருமாவளவன் பேசினார்; வெறுப்பு பேச்சு எதையும் பேசவில்லை.

'மூன்று ஆண்டுகள் மட்டுமே தண்டனை விதிக்கக்கூடிய பிரிவுகளில் பதிவான வழக்கில், ஆறு ஆண்டுகள் தாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது' என்றனர்.

இதை ஏற்ற நீதிபதி, திருமாவளவனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Advertisement