கதவணையில் பராமரிப்பு பணியால் நீர் திறப்புகுடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, ஊராட்சி கோட்டை கதவணையில் பராமரிப்பு பணி காரணமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயத்தால், சிக்கனமாக பயன்படுத்த அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், செக்கானுார் நீர்மின் தேக்க நிலையம், நெருஞ்சிப்பேட்டை நீர்மின் தேக்க நிலையம், கோனேரிப்பட்டி நீர் மின் தேக்க நிலையம், ஊராட்சிக்கோட்டை நீர் மின் தேக்க நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும், ஏப்., மே மாதங்களில் நீர்மின் தேக்க கதவணைகள் ஒவ்வொன்றாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு, 15 நாட்களுக்கு பராமரிப்பு பணி நடப்பது வழக்கம்.
அதன்படி, தேவூர் அருகே, ஊராட்சிக்கோட்டை நீர்மின் தேக்க கதவணை பகுதியில் அனைத்து கதவணை மதகுகளும், கடந்த ஏப்., 25 முதல் திறந்து, தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதனால், தினசரி உற்பத்தி செய்து வந்த, 30 மெகாவாட் மின்சாரம் நிறுத்தப்பட்டது. மேலும், நீர்த்தேக்க பகுதிகளான வேலாத்தா கோவில், ராமக்கூடல், புளியம்பட்டி பரிசல் துறை, புள்ளாக்கவுண்டம்பட்டி, அண்ணமார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் வடிந்து பாறை திட்டுகளாக காட்சியளிக்கின்றன.
கதவணையின் மறுபக்கம், குமாரபாளையம் காவிரி ஆற்றில் இருபுறமும் கரையை தொட்டவாறு தண்ணீர் பாய்ந்து வருகிறது. பராமரிப்பு பணி வரும், மே, 3 வரை நடைபெறுவதால் இந்த நீர்தேக்க பகுதிகளில் உள்ள வயல்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். மேலும், ராமக்கூடல் காவிரி ஆற்றில் இருந்து திருச்செங்கோடு பகுதிகளுக்கு செல்லும் குடிநீர், புள்ளாக்கவுண்டம்பட்டி காவிரி ஆற்றில் இருந்து சங்ககிரி பகுதிகளுக்கு செல்லும் குடிநீர், காவேரிப்பட்டி காவிரி ஆற்றில் இருந்து தேவூர் பேரூராட்சி பகுதிகளுக்கு செல்லும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதனால், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பயன்பெறுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். கூட்டுக்குடிநீர் திட்டத்தால் குமாரபாளையம் அருகே, தட்டான்குட்டை ஊராட்சி பகுதியில் குடிநீர் வினியோகம், 15 நாட்களுக்கு இருக்காது என,
அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Advertisement