தமிழக காங்., தலைவர் பதவிக்கு தேர்தல்; சீனியர் நிர்வாகிகள் போர்க்கொடி

மதுரை: 'காங்கிரசில் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில தலைவர்களையும், தேர்தல் நடத்தி தேர்வு செய்ய வேண்டும். நேரடியாக நியமனம் செய்வதை அகில இந்திய தலைமை கைவிட வேண்டும்' என, அக்கட்சியின் சீனியர் நிர்வாகிகள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.

தமிழக காங்., தலைவர் மாற்றப்படலாம் என்ற தகவலால், அப்பதவியை கைப்பற்ற கட்சிக்குள் கடும் போட்டி நிலவுகிறது.

செல்வப்பெருந்தகை மாற்றப்பட்டால், எம்.பி.,க்கள் கார்த்தி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, சசிகாந்த் செந்தில், சீனியர் தலைவர்கள் செல்லகுமார், இதயதுல்லா, சட்டசபை காங்., தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் போட்டியாக களத்தில் தலைவர் பதவிக்கு காத்திருக்கின்றனர்.

இவர்களில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், காங்., தேசிய தலைவர் கார்கேவின் ஆதரவை பெற்றவரே மாநில தலைவராகும் வாய்ப்பை பெறுவார்.

காங்கிரசில் காலம் காலமாக பின்பற்றப்படும் இந்த நியமன நடைமுறையால், ஒவ்வொரு தலைவரும் அவர்களுக்கென்றே ஒரு கோஷ்டியை உருவாக்கி கொள்கின்றனர். புதிதாக நியமிக்கப்படும் தலைவருக்கு, இந்த கோஷ்டிகள் முழு ஒத்துழைப்பு தருவதில்லை.

இதனால், கட்சிக்குள் பல ஆண்டுகளாக ஒருங்கிணைப்பு என்பதே கேள்விக்குறியாகிவிட்டது. எனவே, மாநில - மாவட்ட நிர்வாகிகள் விரும்பும் மாநில தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்வு முறைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என சீனியர் தலைவர்கள் வற்புறுத்துகின்றனர்.

@block_B@ தலைமைக்கு கடிதம்!

அகில இந்திய காங்., தலைவரை, 700க்கும் மேற்பட்ட மாநில பொதுக்குழு, 50க்கும் மேற்பட்ட செயற்குழு, 75க்கும் மேற்பட்ட அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர்கள், 77 மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்டோர் ஓட்டு போட்டு தேர்வு செய்கின்றனர். இதன்படியே, கடைசியாக கார்கேவுக்கும், சசி தரூருக்கும் ஏற்பட்ட போட்டியில், கார்கே வெற்றி பெற்றார்.

அதேபோல, தமிழகம் உட்பட அனைத்து மாநில தலைவர்களையும் செயற்குழு உறுப்பினர்கள், துணைத் தலைவர்கள் பொதுச்செயலர்கள், மாவட்டத் தலைவர்கள், நியமன உறுப்பினர்கள் உள்ளிட்டோர் ஓட்டு போட்டு தேர்வு செய்யும் நடைமுறையை காங்., தலைமை அமல்படுத்த வேண்டும். இதுகுறித்து மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், அகில இந்திய காங்., தலைமைக்கு கடிதம் அனுப்பி வருகின்றனர்.

- செய்யது பாபு, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர், தமிழக காங்.,block_B

Advertisement