ஹிமாச்சலில் ஜீப் மீது மரம் விழுந்து விபத்து; பெண் ஆசிரியர்கள் 4 பேர் பலி

1


ஷிம்லா: ஹிமாச்சலில் வீசிய பலத்த காற்று காரணமாக, ஜீப் மீது மரம் சரிந்து விழுந்த விபத்தில் பெண் ஆசிரியர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

ஹிமாச்சலப் பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில் உள்ள ஷம்ஷர்-குக்ரா சாலையில் பாலி-ஓயல் அருகே ஜீப்பில் (பொலிரோ கேம்பர்) பெண் ஆசிரியர்கள் உள்பட 7 பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பலத்த சூறாவளி காற்று வீசியுள்ளது. இதனால், சாலையின் அருகே இருந்த ராட்சத பைன் மரம் ஒன்று சரிந்து, ஜீப் மீது விழுந்துள்ளது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த ஜீப் அருகே இருந்த பள்ளத்தில் உருண்டு சென்றது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் உள்ளூர் மக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், இந்த விபத்தில் ஸ்நேகலதா,38, பன்டி குண்டால்,38, உஷா குமாரி,43, சீமா ஆஷாத்,54, ஆகிய 4 பெண் ஆசிரியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஓட்டுநர் உள்பட மற்ற 3 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement