இடி, மின்னல், காற்று வந்தது மழை ஏனோ பொழியவில்லை

திருப்பூர்:நேற்று முன்தினம் மாலை கருமேக கூட்டங்கள் திரண்டு, இரவு 9:00 மணி வரை இடி, மின்னல், காற்று மிரட்டிய வேகத்துக்கு மழை விடிய விடிய கொட்டி தீர்க்கும் என திருப்பூர் மக்கள் காத்திருந்தனர். ஆனால், எதிர்பார்ப்பு பொய்த்து போனது.

திருப்பூரில் கடந்த சில நாட்களாக, 36 - 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி வருகிறது. காலை 10:00 மணிக்கு சுளீரென அடிக்க துவங்கும் வெயில், மாலை 5:00 மணியாலும், அனலை கக்குகிறது. குறிப்பாக, மதியம் 12:00 - மாலை 4:00 மணி வரை, சாலையில் வாகனங்களில் செல்ல முடியாமல், சிக்னலில் ஒரு நிமிடத்துக்கு மேல் நிற்க முடியாதபடி, வெப்பக்காற்று வீசுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கருமேக கூட்டங்கள் திரண்டு, காற்றின் வேகம் மெல்ல அதிகரித்தது. இரவு 8:00 மணி துவங்கி, 10:00 மணி வரை இடி, மின்னல் மிரட்டியது. அப்பாடா, வெயிலையும், உஷ்ணத்தையும் தணிக்க ஒரு மழை வெளுத்து வாங்கும் என திருப்பூர்வாசிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், நள்ளிரவு வரை வீசிய அதீத காற்றால், மேக கூட்டங்கள் கலைந்து சென்றது. சற்றுநேரம் தொடர்ந்து ஈரப்பதம், அதிகாலை அப்படியே மாறியது. நேற்று நாள் முழுதும் மேகங்கள் வெயிலை தடுத்தாலும், 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் காரணமாக, உஷ்ணமும், வெப்பமும் குறையவில்லை. மழை எதிர்பார்த்த மக்களுக்கு அதிகாலையில் ஏமாற்றமே மிஞ்சியது.

Advertisement