மீண்டும் வெல்லுமா சென்னை * மும்பை அணியுடன் பலப்பரீட்சை
சென்னை: லீக் தொடரில் இன்று சென்னை, மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சொந்தமண்ணில் சிறப்பாக செயல்பட்டு, சென்னை அணி வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
கிரிக்கெட் லீக் அரங்கில் வெற்றிகரமான அணிகள் சென்னை, மும்பை. தலா ஐந்து முறை கோப்பை வென்றன. இம்முறை தொடர்ந்து தடுமாறுகின்றன. இரு அணியினரும் மோசமான 'பார்மில்' உள்ளதால், யார் வெற்றி பெறுவர் என தெளிவாகத் தெரியவில்லை.
வழக்கமாக, லீக் அரங்கின் முக்கிய மோதலாக பார்க்கப்படும் சென்னை-மும்பை போட்டியில் யார் ஆதிக்கம் செலுத்துவர் என்பதற்குப் பதில், இன்று எந்த அணி தப்பி பிழைக்கும் என்ற நிலை தான் காணப்படுகிறது.
8 போட்டியில் 3ல் மட்டும் வென்ற கேப்டன் ருதுராஜ் தலைமையிலான சென்னை அணி, நிலையற்ற ஆட்டம், மோசமான ரன் ரேட் காரணமாக, 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறுவதில் நிச்சயமற்ற நிலை நிலவுகிறது.
'சீனியர்' தோனி இல்லாத நிலையில், புதிய வரவு சஞ்சு சாம்சன் (8 போட்டி, 304 ரன்), 2 சதம் அடித்துள்ளார். மீண்டும் ஒருமுறை இவர், சென்னை அணியை தோளில் சுமப்பார் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
மற்றபடி ருதுராஜ் (8 போட்டி, 178 ரன்), சர்பராஸ் கான் (161), ஷிவம் துபே (150), பிரவிஸ் (5ல் 64) என பலரும் சீரற்ற பேட்டிங்கை வெளிப்படுத்துகின்றனர்.
வேகப்பந்து வீச்சில் கம்போஜ் (14 விக்.,), ஓவர்டன் (9), சுழலில் நுார் அகமது (7), அகீல் ஹொசைன் (6) உதவலாம்.
மும்பை எப்படி
மும்பை அணியின் 'டாப் ஆர்டர்' பேட்டர்கள் ரன் மழை பொழிந்தாலும், பொல பொலவென சரியும் 'மிடில் ஆர்டர்', மோசமான பவுலிங் காரணமாக, எதிரணி பேட்டர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. ஐதராபாத்துக்கு எதிராக 243 ரன் என, அதிக ஸ்கோர் எடுத்தும் வெற்றி பெற முடியவில்லை.
இதுவரை 8 போட்டியில் 2ல் மட்டும் (6 தோல்வி) வென்றதால், 'பிளே ஆப்' வாய்ப்பை தக்கவைக்க, மீதமுள்ள 6 போட்டியிலும் வென்றாக வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளது.
பேட்டிங்கில் ரிக்கிள்டன் (260), திலக் வர்மா (188), நமன் திர் (176), சூர்யகுமார் (162), குயின்டன் டி காக் (3ல் 132) உதவ வேண்டும். 'ஆல் ரவுண்டர்' கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுடன் (128 ரன், 4 விக்.,) கசன்பர் (10 விக்.,), ஷர்துல் தாகூர் (6), அஷ்வனி குமார் (6) பவுலிங்கில் கைகொடுக்க வேண்டும்.
8 போட்டியில் 2 விக்கெட் மட்டும் வீழ்த்திய பும்ரா, செயல்பாடு, மும்பை அணிக்கு பின்னடைவு. கடந்த முறை மோதிய போட்டியில் சென்னை அணி 103 ரன்னில் மும்பையை வென்றது. இதுபோல, சென்னை மீண்டும் சாதிக்க வேண்டும் என எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
யார் ஆதிக்கம்
இரு அணிகளும் 40 போட்டியில் மோதின. இதில் சென்னை 19, மும்பை 21ல் வென்றன. கடைசியாக மோதிய 6 போட்டியில் சென்னை 5, மும்பை 1ல் வென்றன.
எப்போது வருவார் தோனி
சென்னை அணி முன்னாள் கேப்டன் தோனி 44. கால் தசை பிடிப்பு காரணமாக, இதுவரை எவ்வித போட்டியிலும் பங்கேற்கவில்லை. இன்று களமிறங்குவார் என நம்பப்பட்டது.
இதுகுறித்து சென்னை அணி பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி கூறுகையில், '' தோனி காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டார். நன்றாக பயிற்சியில் ஈடுபடுகிறார். எனினும், இன்றைய போட்டியில் தோனி விளையாட மாட்டார். வரும் 5ம் தேதி டில்லியில் நடக்க உள்ள போட்டியில் தோனி பங்கேற்பார்,'' என்றார்.
மேலும்
-
போட்டி தேர்வு, கோடைகால பயிற்சி மையங்களளை தேர்ந்தெடுப்பதில் தேவை உஷார்! விடுமுறை கால வகுப்பு என்ற பெயரில் களமிறங்கும் போலி மையங்கள்
-
ஈரானுக்கு இரண்டு வழி: அதிபர் டிரம்ப் நிபந்தனை
-
திவால் ஆன நிறுவனத்தின் சொத்துக்களை வாங்கும்போது கவனம் தேவை!
-
அறக்கட்டளை நிர்வாகத்திடம் சொத்து வாங்குவோர் கவனிக்க!
-
முன்னாள் ராணுவ வீரருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
-
பணி நிறைவு பாராட்டு விழா