என்னை தொட்டதற்கு வருத்தப்படுவீர்கள்: சொன்னதை செய்து காட்டிய விஜய்

25

சென்னை: த.வெ.க., தலைவர் விஜய், தான் பங்கேற்ற அனைத்து கட்சி கூட்டங்களிலும், பிரசாரங்களிலும், 'தி.மு.க.,விற்கும், த.வெ.க.,விற்கும் இடையில்தான் போட்டி' என, ஆணித்தரமாக கூறி வந்தார்.

கரூரில் அவரது பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, குழந்தைகள், பெண்கள் உட்பட, 41 பேர் இறந்தனர். இதனால், ஒரு மாதமாக, தனது வீட்டில் இருந்து வெளியே வராமல், துக்கத்தில் முடங்கினார்.

தி.மு.க.,வினர் செய்த சதி செயல் காரணமாக, கரூர் சம்பவம் நடந்ததாக, த.வெ.க., தரப்பில் புகார் கூறப்பட்டது. சி.பி.ஐ., விசாரணையில் ஆஜரானபோது, விஜய், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர், இந்த குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இந்த சம்பவத்திற்கு பின், முதல்வர் ஸ்டாலினுக்கு, விஜய் நேரடியாக சவால் விட்டார். 'விஜயை ஏன் தொட்டோம் என, தேர்தலுக்கு பின் வருத்தப்படுவீர்கள்' எனக் கூறி வந்தார்.

அதை நிரூபிக்கும் வகையில், இத்தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை விஜய் பெற்றுள்ளார். ஆளும் கட்சியாக இருந்த, தி.மு.க., தோல்வி அடைந்தது. 'தி.மு.க., 2.0' எனக் கூறி வந்த, முதல்வர் ஸ்டாலின் போட்டியிட்ட, கொளத்துார் தொகுதியில், படு தோல்வி அடைந்தார்.

விஜய் தனது சவாலில் வென்று விட்டார் என, த.வெ.க.,வினர் பெருமிதம் அடைந்து உள்ளனர்.

Advertisement