தனியார் வாகன காப்பகங்களை ஆய்வு செய்யுங்க
அருப்புக்கோட்டை: மாவட்டத்தில் உள்ள தனியார் வாகன காப்பகங்கள் தரமான கட்டுமானம் இல்லாமல் கூரைகள் சரிந்து விழுகிறது. இதனால் வாகனங்கள் சேதம் அடைவதால் கட்டமைப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். சேதம் அடைந்த வாகனங்களுக்கு இழப்பீடும் வழங்க வேண்டுமென வாகன உரிமையாளர்கள் விரும்புகின்றனர். மாவட்டத்தின் பல ஊர்களில் தனியார் வாகன காப்பகங்கள் உள்ளன. தெருக்களில் கார்களை நிறுத்த வசதி இல்லாதவர்கள், வீடுகளில் நிறுத்த முடியாதவர்கள் தங்கள் கார்களை அருகில் உள்ள தனியாக வாகன காப்பகங்களில் வாடகை கொடுத்து நிறுத்துகின்றனர்.
மாத வாடகையாக ஆயிரம் ரூபாயிலிருந்து ஆயிரத்து 500 ரூபாய் வரை தருகின்றனர்.
வாகனங்கள் பாதுகாப்பாக சேதாரம் இன்றி நிற்கும் என்ற நம்பிக்கையில் தான் வாகன உரிமையாளர்கள் தனியார் வாகன காப்பகங்களை நாடு கின்றனர்.
ஆனால் தரமற்ற முறையில் கட்டப்படும் தனியார் வாகன காப்பகங்களின் கூரைகள் மழை, சூறாவளிக்கு பெயர்ந்து 'ஷெட்' முழுவதும் அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் கார்களின் மீது சாய்ந்து சேதப்படுத்தி விடுகின்றன.
தரமான இரும்பு கம்பிகள், சிமெண்ட் தூண்கள், தரமான தடிமனான கூரைகளை பயன்படுத்தாமல் வாடகை ஒன்றை மட்டும் கருத்தில் கொண்டு, தரமற்ற கட்டுமான பணிகள் செய்து 'ஷெட்' கள் அமைக்கப்படுகின்றனர்.
வாகனங்களை நிறுத்துபவர்களும் தரமான கட்டுமானத்தில் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதும் இல்லை.
இதனால் மழை, புயல், சூறாவளி அடிக்கும் நேரத்தில் தாக்குப் பிடிக்க முடியாமல் கூரைகள் பறந்து விடுகின்றன. மேலும் மொத்த கூரைகளும் அங்குள்ள கார்களின் மீது சாய்ந்து அவற்றை சேதப்படுத்துகின்றன.
அருப்புக்கோட்டையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு, காந்தி நகர் சர்வீஸ் ரோட்டில் உள்ள தனியார் வாகன காப்பகத்தில் தரமற்ற கட்டுமான பணியால் பலத்த காற்றுக்கு கூரை பெயர்ந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 15க்கும் மேற்பட்ட கார்களின் மீது சாய்ந்ததில் காரின் மேற்பகுதி, முன் புற கண்ணாடிகள் உள்ளிட்டவைகள் உடைந்து சேதமடைந்தன.
இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சிகள் வாகன காப்பகம் முறையான அங்கீகாரம் பெற்றுள்ளதா, தரமான கட்டுமானத்தில் இருக்கிறதா ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும்.
அவ்வாறு கூரை வாகனங்களின் மீது விழுந்து சேதப்படுத்தும் நிலையில் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கவும் என்ற விதிகளை சேர்த்து, வாகன காப்பகத்திற்கு அனுமதி வழங்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.