பா.ஜ.,வினரிடம் முதல்வர் ரங்கசாமி... திட்டவட்டம் : வளர்பிறையில் பதவியேற்க திட்டம்

2

புதுச்சேரியில் கடந்த 2021ல் நடந்த 15வது சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்.,- பா.ஜ., கூட்டணி 16 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றியது. 10 இடங்களை பிடித்த என்.ஆர்.காங்., கட்சி முதல்வர், 3 அமைச்சர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகளும், 6 இடங்களை பிடித்த பா.ஜ.,விற்கு சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர் பதவிகள் பங்கிட்டு கொண்டு கூட்டணி அரசு, மத்திய அரசு ஆதரவுடன் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தது.

அபார வெற்றி அதே உத்வேகத்துடன் தே.ஜ., கூட்டணி 16வது சட்டசபை தேர்தலை சந்திந்தன. அதில், மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்.,-16; பா.ஜ.,-10; அ.தி.மு.க., மற்றும் ல.ஜ.க., தலா -2 தொகுதிகளில் களமிறங்கின. நேற்று முன்தினம் ஓட்டு எண்ணிக்கையில், என்.ஆர்.காங்.,- 12; பா.ஜ.,-4; அ,தி.மு.க., மற்றும் ல.ஜ.க., தலா ஒரு தொகுதி என மொத்தம் 18 தொகுதிகளை கைப்பற்றி, ஆட்சி அமைக்க அருதி பெரும்பான்மையை பெற்றது.

Tamil News

கவர்னரை சந்திக்க முடிவு அதனைத் தொடர்ந்து என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ.,க்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் இரவு காமராஜர் சாலையில் உள்ள ஓட்டலில் நடந்தது. கட்சி தலைவரும், முதல்வருமான ரங்கசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ.,க்கள் முதல்வர் ரங்கசாமியை, என்.ஆர்.காங்., கட்சியின் சட்டசபை தலைவராக ஒருமனதாக தேர்வு செய்தனர். அதற்கான கடிதத்தில் அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் கையெழுத்திட்டனர்.

தொடர்ந்து நடந்த கூட்டத்தில், கூட்டணி கட்சியான பா.ஜ.,வினர் ஆதரவு கடிதம் கொடுத்ததும் கவர்னரிடம் சமர்பித்து, மத்திய அரசின் அனுமதி பெற்று முதலில் வரும் முகூர்த்த தினத்தில் பதவி ஏற்க முடிவு செய்தனர்.

பா.ஜ., கூட்டம் இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களின் ஆலோசனைக் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கட்சி தலைவர் ராமலிங்கம் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், மாநில தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா மற்றும் தேர்தலில் வெற்றி பெற்ற நமச்சிவாயம், ஜான்குமார், ராஜசேகர், மீனாட்சி சுந்தரம், நெடுங்காடு தொகுதியில் சுயேச்சையாக வெற்றி பெற்ற மீனாட்சி சுந்தரம் மற்றும் ல.ஜ.க., தலைவர் சார்லஸ் மார்ட்டின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சட்டசபை பா.ஜ., தலைவராக நமச்சிவாயத்தை ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். அதற்கான கடிதம், நமச்சிவாயத்திடம் மன்சுக் மாண்டவியா வழங்கினார். தொடர்ந்து நடந்த கூட்டத்தில், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, முதல்வரை சந்தித்து ஆதரவு கடிதம் தர முடிவு செய்தனர்.

கூடுதல் பதவி கேட்பு இந்நிலையில், தன் கட்சி வேட்பாளர் சந்திர பிரியங்காவை தோற்கடித்த சுயேச்சை வேட்பாளர் விக்னேஸ்வரனை வைத்துக் கொண்டு பா.ஜ.,வினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதை அறிந்த முதல்வர் ரங்கசாமி, பா.ஜ.,வினரை சந்திப்பதை தவிர்த்தார். ஒரு வழியாக நீண்ட முயற்சிக்கு பின் நேற்று மதியம், பா.ஜ., மாநில தேர்தல் பொறுப்பாளரான மன்சுக் மாண்டவியா, மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ஆகியோர், ஆரோவில்லில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, தேர்தலில் பா.ஜ., 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், அமைச்சரவையில் கூடுதல் இடம் தேவை என்பதை வலியுறுத்தினர்.

முதல்வர் ஆவேசம் அதிர்ச்சியடைந்த முதல்வர் ரங்கசாமி, எங்கள் கட்சி வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவரை வைத்து என்னிடமே கணக்கு காட்டுகிறீர்களா? நமது கூட்டணி ஒப்பந்தபடி சுயேச்சைகளை எல்லாம் கணக்கு காட்ட வேண்டாம்.

மேலும், ஒரு அமைச்சர், துணை சபாநாயகர் பதவிக்கு ஒப்புக்கொண்டால் பேச்சுவார்த்தை நடத்தலாம் எனக் கூறியதை கேட்டு, பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான பா.ஜ.,வினர் என்ன முடிவு எடுப்பது என்ன என்பது புரியாமல் பெரும் குழப்பத்துடனே திரும்பினர்.

தள்ளி போகும் பதவியேற்பு அதே நேரத்தில் முதல்வர் ரங்கசாமி, தனது கட்சி நிர்வாகிகளிடம் பதவி ஏற்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

அதில், அடுத்த வாரத்தில் வரும் முகூர்த்த நாளில் பதவி ஏற்பதா அல்லது 16ம் தேதி அமாவாசை முடிந்த பின், வளர்பிறை முகூர்த்த நாளில் பதவி ஏற்பதா என்பது குறித்து ஆலோசனை நடத்தினர். இதனால், புதிய அமைச்சரவை பதவி ஏற்பு தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Advertisement