உடுமலையில் 25  ஆண்டுக்கு பின் தி.மு.க., கொண்டாட முடியாத தொண்டர்கள்

உடுமலை: உடுமலை தொகுதியில், 1996ம் ஆண்டுக்கு பின், தொடர்ந்து அ.தி.மு.க., வெற்றி பெற்று வந்த நிலையில், 25 ஆண்டுகளுக்குப்பின், தற்போதைய தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது.

உடுமலை  தொகுதி, 1951ம் ஆண்டு முதல் சட்டசபை தேர்தலை சந்தித்து வருகிறது. தொகுதி உருவான, 1951ல், காங்.,கட்சியும், 1957 சுயே., 1962, காங்., 1967,71ல், தி.மு.க., 1977,80 தேர்தல்களில் அ.தி.மு.க., 1984ல், காங்., 1989ல், தி.மு.க., 1991ல், அ.தி.மு.க., என மாறி, மாறி மூன்று கட்சிகளும் தொகுதியை கைப்பற்றி வந்தன.

1996ல்,  தி.மு.க., வென்றது. தொடர்ந்து நடந்த, 2001, 2006, 2011, 2016, 2021 ஆகிய ஐந்து தேர்தல்களில், இரு முறை சண்முகவேலு, ஒரு முறை பொள்ளாச்சி ஜெயராமன், இரு முறை தற்போது எம்.எல்.ஏ., வாக உள்ள ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெற்றி பெற்று, தொடர்ந்து, 25 ஆண்டுகளாக அ.தி.மு.க., கோட்டையாக உடுமலை தொகுதி இருந்தது.

தற்போதைய தேர்தலில், அ.தி.மு.க.,வை சேர்ந்த ராதாகிருஷ்ணன், தி.மு,க., இளைஞரணி தெற்கு மாவட்ட அமைப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் போட்டியிட்டனர்.

ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதல், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வேட்பாளர்கள் மாறி, மாறி முன்னிலை வகித்த நிலையில், திடீரென ஒரு சுற்றில் த.வெ.க., முன்னிலை பெற்றது. இறுதியில், தி.மு.க., 68,549; அ.தி.மு.க., 65,667; த.வெ.க., 59,831 ஓட்டுகள் பெற்றது; 2,882 ஓட்டு கூடுதலாக பெற்று, தி.மு.க.,வேட்பாளர் ஜெயக்குமார் வெற்றி பெற்றார்.

பல்வேறு காரணங்களால், கடந்த 25 ஆண்டுகளாக தி.மு.க., உடுமலை தொகுதியை கைப்பற்ற முடியவில்லை. தற்போது வரலாறு திரும்பி, மீண்டும் தி.மு.க., உடுமலை தொகுதியை கைப்பற்றியுள்ளது. ஒரு புறம் தி.மு.க.,வினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மாநிலத்தில் ஆட்சியை இழந்துள்ளதால், உற்சாகம் குறைந்துள்ளது.

Advertisement