மக்கள் மனசு; த.வெ.க.வை வாரியணைக்கவும், திமுகவை துாக்கியெறியவும் காரணம் என்ன?

16


நமது சிறப்பு நிருபர்




ஒருவழியாக தேர்தல் முடிந்து புதிய அரசு ஆட்சி அமைக்கவுள்ளது. இத்தேர்தலில் தி.மு.க.வின் சறுக்கலுக்கான பின்னணி என்ன? நடிகர் விஜய்க்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள அமோக வரவேற்புக்கு காரணம் என்ன? கோவை மக்களிடம் கேட்டோம்...!

விஜய் மீது நம்பிக்கை




எம்.ஜி.ஆர். போல் நடிகர் விஜயும் ஏழை, எளிய மக்களுக்கு உதவுவார் என்னும் எதிர்பார்ப்பில் ஏராளமானோர் ஓட்டளித்துள்ளனர். தி.மு.க. அரசு குறித்து நடிகர் விஜய் கூறிய புகார்கள் பொதுமக்களிடம் எடுபட்டு விட்டன. எனவே ஒரு தரப்பினர் தி.மு.க.வை புறக்கணித்து விட்டனர். - கலைச்செல்வி, அன்னூர்.

மக்கள் மாற்றம் விரும்பினர்



தி.மு.க. அரசின் அனைத்து துறைகளிலும் லஞ்சம் அதிகரித்து விட்டது. விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டனர். விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்கு மாற்றாக ஒரு அரசு அமைய வேண்டும் என மக்கள் காத்திருந்தனர். இந்த சமயத்தில் விஜயின் த.வெ.க. வந்தது. அமோக ஆதரவு தந்துள்ளனர். - செல்வராஜ், கதவுகரை.

இளம் வாக்காளர் முடிவு



மக்கள் இந்த முறை மாற்றத்தை விரும்பி ஓட்டு போட்டு உள்ளனர். இந்த தேர்தலில் இளம் வாக்காளர்கள் அதிகம் இருந்ததால், தமிழகத்துக்கு ஒரு இளம் தலைவர் வர வேண்டும் என நினைத்து விஜய்க்கு அதிகம் பேர் ஓட்டு போட்டுள்ளனர். விஜய் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நல்ல திட்டங்கள் தர வேண்டும். -- ந.பிரகதி, கோவை.


விஜயுடன் மக்கள் கூட்டணி




மக்கள் விரும்பும் ஆட்சியைக் கொடுக்க ஒருவர் முன்வந்தார். அவருக்கு பல நெருக்கடிகளை தி.மு.க. கொடுத்தது. பூத் கமிட்டிக்கு ஆள் இல்லை என்றனர். டெபாசிட் வாங்க மாட்டார்கள் என்றனர். அவர் மீது நம்பிக்கை வைத்து மக்கள் வெற்றி பெற வைத்துள்ளனர். - ராஜ்குமார், சின்னவேடம்பட்டி

கட்சிகள் மாறியாக வேண்டும்




இரு பெரும் கட்சிகளுக்கு நடுவே, மாற்றத்தை முன்னிருத்தி ஒரு கட்சி வந்திருக்கிறது. நீண்ட நாட்களாக தி.மு.க. - அ.தி.மு.க. என்ற இரு கட்சிகளை மட்டுமே நம்பியிருந்த சூழலில், த.வெ.க. தமிழகத்தில் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது. -- கோவிந்தராஜ், சிவானந்தா காலனி

தி.மு.க. மீது மக்கள் கோபம்




தி.மு.க. இலவச பஸ் விட்டது, மகளிர் உதவித்தொகையை மட்டும் பெரிய சாதனையாக சொல்கிறார் ஸ்டாலின். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கவில்லை. கல்விக்கடனை ரத்து செய்யவில்லை. தி.மு.க. மீது மக்களுக்கு ஏற்பட்ட கோபம்தான் இந்த முடிவு. விஜய் நல்லது செய்வார் என ஜெயிக்க வைத்துள்ளனர். - சுஜி, சிவானந்தா காலனி

மாற்றத்துக்கு கிடைத்த வாய்ப்பு




பல காலமாக திராவிட கட்சிகளை மாற்ற வேண்டும் என்று மக்கள் விரும்பினர். இப்போது விஜய் மூலம் அந்த சந்தர்ப்பம் அமைந்து விட்டது. மக்கள் பயன்படுத்திக்கொண்டனர். இதுதான் த.வெ.க.வின் வெற்றிக்கு காரணம். எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்று தி.மு.க. மாறாமல் இருந்ததால், அக்கட்சியை தமிழக மக்கள் துாக்கி எறிந்துள்ளனர். - தமிழரசன், மேட்டுப்பாளையம்

விஜய் மீது நம்பிக்கை




இரண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சியை பார்த்து சலித்துப்போன மக்கள், இப்போது ஒரு வலுவான மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். குறிப்பாக விலைவாசி உயர்வை யாராவது கட்டுப்படுத்த மாட்டார்களா என்ற ஏக்கத்தில் மக்கள் உள்ளனர். அந்த ஏக்கத்தை விஜய் தீர்ப்பார் என பலரும் நம்புகின்றனர். -- நடேசன், பால் நிறுவனம்

முதியவர்கள் வேண்டாம்




இளைய தலைமுறைக்கு வழிவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது. அரசியலில் அனுபவம் வேண்டும் என்று சொல்லிக்கொண்டே, இன்னும் எத்தனை காலம்தான் இவர்களுக்கு ஓட்டுப் போடுவது? அரசியலில் இளரத்தம் பாய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அந்த வகையில் புதிய முகங்களுக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளது. ---ரேணுகா, புதூர்

ஊழலற்ற ஆட்சி தேவை




தமிழகத்தை தி.மு.க. அ.தி.மு.க. தான் பல ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்து வந்தன. நான் மாற்றத்தை விரும்பினேன். ஊழல் இல்லாத ஆட்சியை விஜய் தருவார் என நம்புகிறேன். ஓட்டுக்கு பணம் எனும் பார்முலா இனி செல்லுபடியாகாது என்பதை தமிழக மக்கள் நிரூபித்து விட்டனர். -பிரபாகரன், மேட்டுப்பாளையம்-

சட்டம் ஒழுங்கு சரியில்லை




சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது. வன்முறை தலைவிரித்தாடியது. கோவை கூட்டு பாலியல் சம்பவம் போல தமிழகத்தில் பல இடங்களில் நடந்த சம்பவம் பற்றி அரசு கவலை கொள்ளவில்லை. அதனால்தான் தி.மு.க. தோல்வியை தழுவியது. இதற்கெல்லாம் விஜய் வாயிலாக நிவாரணம் கிடைக்கும் என்று கருதி, அவரை வெற்றி பெறச்செய்துள்ளனர். -- ஜோதிமது, கவுண்டம்பாளையம்

தி.மு.க. எதிர்ப்பு அலை




தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பு அலைதான் தி.மு.க. தோற்க காரணம். மக்கள் எதிர்பார்ப்பை 50 சதவீதமாவது நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் அக்கட்சி அடுத்த முறை ஆட்சிக்கு வரமுடியும். ஜாதி, மத, இன அடிப்படை இல்லாததால் தான் விஜயை மக்கள் தேர்வு செய்துள்ளனர். - சசிகலா, நரசிம்மநாயக்கன்பாளையம்

பெண்களுக்கு பாதுகாப்பில்லை




தி.மு.க. பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும், தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாடக்கூடிய சூழ்நிலை இல்லை. பாலியல் வன்கொடுமைகள் அதிகம் நடந்துள்ளன. இதற்கு தீர்வு காண தி.மு.க. அரசு தவறியது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பி விஜய்க்கு ஓட்டு போட்டு உள்ளனர். -சசிகுமார், மேட்டுப்பாளையம்.

வாரிசு அரசியலால் வெறுப்பு




தி.மு.க. தலைமை பழைய ஆட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. வாரிசு அரசியல் மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனால் தி.மு.க.வை மக்கள் புறக்கணித்துள்ளனர். அதேநேரத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்களை விட, சொந்த வீட்டில் மகன், மகள், பேரன், பேத்தி ஆகியோர் த.வெ.க.வுக்கு ஆதரவாக இருந்ததும் காரணம். - சோமசுந்தரம், மேட்டுப்பாளையம்.

வளர்ச்சி ஏதுமில்லை




எனது தந்தை மற்றும் தாத்தா காலத்தில் இருந்தே, தி.மு.க. அ.தி.மு.க. மாறி மாறி ஆட்சி செய்து வந்தது. இத்தனை ஆண்டுகளாகியும் தமிழகத்தில் சொல்லும்படியான வளர்ச்சி எதுவும் நடக்கவில்லை. தமிழக மக்கள் மீது கடன் சுமை மட்டுமே வந்தது. எனவே, ஆட்சி மாற்றம் கட்டாயம் வேண்டும் என்பதற்காக, மக்கள் விஜயை ஆதரித்துள்ளனர். -- தினேஷ், தென்னமநல்லூர்.

மாற்றம் தேவைப்பட்டது




தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஆகவே த.வெ.க.வுக்கு வாக்களித்துள்ளனர். மக்கள் நினைத்தபடி மாற்றம் வந்துவிட்டது. மாற்றம் வேண்டும் என்று நினைத்துவிட்டால் பணநாயகம் எல்லாம் எடுபடாது. மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் த.வெ.க. செயல்பாடுகள் இருக்க வேண்டும். - பாலா, சிங்காநல்லூர்

அடுத்த தலைமுறைக்காக




இந்த முறை மாற்றம் வேண்டும் என்று விசில் சின்னத்திற்கு வாக்களித்தேன். இந்த மாற்றம் தமிழகத்திற்கு நல்லது. ஒருமுறை மாற்றி வாக்களித்தால் அடுத்த தலைமுறையினர் நன்றாக இருப்பார்கள் என்று நம்பி வாய்ப்பு கொடுத்துள்ளோம். த.வெ.க.வினர் பொறுப்பை உணர்ந்து செயல்படுவார்கள் என்று நம்புகிறேன். -சேகர், பி.என்.புதூர்

வாக்குறுதி நிறைவேற்றவில்லை



இந்த தேர்தலில் மாற்றம் கொண்டு வர மக்கள் நினைத்துள்ளனர்.ஆட்சியாளர்கள் சரியாக நடந்து இருந்தால் இந்த மாற்றம் வந்திருக்காது. கடந்த காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றவில்லை. த.வெ.க.வினர் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. - சிந்தியா, சுந்தராபுரம்


குழந்தைகள் வற்புறுத்தல்




விஜய் சினிமாவில் ஹீரோ என்பதால், அதை நம்பி மக்கள் ஓட்டு போட்டு விட்டனர். பல வீடுகளில் குழந்தைகள் கட்டாயப்படுத்தியதால், அவர்களுக்கு பயந்து விஜய்க்கு ஓட்டு போட்டுள்ளனர். இனிமேல் என்ன நடக்க போகிறது என்று போக போகத்தான் தெரியும். --- வினிஷ்சேகர், மதுக்கரை

சினிமாவின் தாக்கமே காரணம்




சினிமாவின் தாக்கம், திராவிட கட்சிகளின் மேல் மக்களுக்கு இருந்த வெறுப்பு இந்த இரண்டும்தான் விஜய் வெற்றி பெற முக்கிய காரணம். தி.மு.க. கட்சிக்கு கடந்த முறை மக்கள் வாய்ப்பு கொடுத்தனர். அதை அவர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. இலவசங்களை வைத்து ஓட்டிவிடலாம் என நினைத்து விட்டனர். --ஜெனிபர் மானியா, கீரணத்தம்

தி.மு.க.வில் ஆளுமை இல்லை




தி.மு.க. தோல்விக்கு கருணாநிதிக்கு பிறகு ஆளுமையான தலைமை அங்கு இல்லை. நட்சத்திர பேச்சாளர்களும் இல்லை. உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி, பேரனை கட்சியில் அடையாளப்படுத்துவது போன்றவற்றை மக்கள் விரும்பவில்லை. இளம் தலைமுறைக்கு விஜய் மீது இருந்த ஈர்ப்பும் வெற்றிக்கு காரணம். - சூர்யா, சிங்கநல்லுார்

Advertisement