சிங்கத்தை தொடர்ந்து சிறுத்தை பூனை தப்பியது; வண்டலுார் பூங்காவில் பாதுகாப்பு குளறுபடி

2


தாம்பரம்: சென்னையை அடுத்துள்ள வண்டலுார் பூங்காவில், கடந்த அக்டோபரில், சிங்கம் ஒன்று மாயமான நிலையில், தற்போது சிறுத்தை பூனை ஒன்று கூண்டில் இருந்து தப்பியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாயமான சிறுத்தை பூனையை வலை போட்டு, ஊழியர்கள் தேடி வருகின்றனர். அடுத்தடுத்து விலங்குகள் மாயமானது, பார்வையாளர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.


சென்னையை அடுத்துள்ள வண்டலுார் அறிஞர் அண்ணா பூங்கா, ஆசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்கா என்ற சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. இங்கு, 1,500 ஏக்கர் பரப்பளவில், பாலுாட்டிகள், ஊர்வன, பறவைகள், ஊன் உண்ணிகள் என, எட்டு வகையான, 2,400 விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன.

அதிர்ச்சி



வார நாட்களில், 2,500 முதல் 3,000 வரையிலும், விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், 7,500 முதல் 9,000 வரையிலும் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். இப்பூங்காவில், விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ், ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஜம்பு பூங்காவில் இருந்து ஒரு ஜோடி சிறுத்தை பூனை, 2026 மார்ச்சில், இப்பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டன. அவை, விலங்குகள் புனர்வாழ்வு மையத்தில், தனியாக வைத்து பராமரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், பொதுமக்களின் பார்வைக்கு விட முடிவு செய்த பூங்கா நிர்வாகிகள், நேற்று முன்தினம், கரடி கூண்டு எதிரே நரி பராமரிக்கப்பட்ட கூண்டில், இந்த சிறுத்தை பூனைகளை விட்டனர்.

நரியை பொறுத்தவரை, அது தரையிலேயே உலாவும். கூண்டின் மேல் ஏறாது. ஆனால், சிறுத்தை பூனைகள் கூண்டின் மேல் ஏறும் தன்மை கொண்டவை. அப்படி இருக்கையில், கூண்டை முறையாக ஆய்வு செய்யாததால், மேற்பகுதி கம்பியில் இருந்த ஓட்டை வழியாக, பெண் சிறுத்தை பூனை, தப்பி காட்டு பகுதிக்குள் சென்றுவிட்டது.

சிறிது நேரம் கழித்து பார்த்தபோது, பெண் சிறுத்தை பூனை தப்பியதை கண்டு, பூங்கா ஊழியர்களும், அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, கூண்டை சுற்றி வலைவீசி தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, தனியாக குழு அமைத்து, தப்பி சென்ற பெண் சிறுத்தை பூனையை, இரவு பகலாக வலைவீசி தேடி வருகின்றனர். கிடைக்கவில்லை எனில், தனியாக கூண்டை தயார் செய்து, அதில் ஆண் சிறுத்தை பூனையை வைத்து, காட்டுப் பகுதிக்குள் தப்பி சென்ற பெண் சிறுத்தை பூனையை பிடிக்க, நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

தொடரும் சம்பவங்கள்





கடந்த 2025, அக்., 3ல், 'லயன் சபாரி' பகுதியில், பார்வையாளர்கள் கண்டு ரசிப்பதற்காக விடப்பட்ட இரண்டு சிங்கங்களில், 6 வயதான 'சேரு' என்ற ஆண் சிங்கம் தப்பியது. திரும்பி கூண்டிற்கு வரவில்லை. கண்ணுக்கு எட்டும் துாரம் வரை அதை காணவில்லை.
காட்டுப் பகுதிக்குள் எங்கு சென்றது என்பது தெரியாததால், ஊழியர்கள் பதற்றம் அடைந்தனர். மறுநாள் ஆகியும் சிங்கம் திரும்பாததால், பூங்கா வட்டாரத்தில் பீதி அடைந்தனர்.

மூன்று நாட்களுக்கு பின், அதுவாகவே கூண்டிற்கு திரும்பி வந்தது. வண்டலுார் பூங்காவில், சமீபகாலமாக விலங்குகள் இறப்பது மற்றும் தப்பித்து செல்வது அதிகரித்து வருகிறது. இதற்கு, நிர்வாக சீர்கேடு முக்கிய காரணம் என, ஊழியர்கள் குற்றம் சாட்டினர். தொடரும் இதுபோன்ற நிகழ்வுகள், பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குவதாக உள்ளது.

பூங்கா ஊழியர்கள் தரப்பில் கூறியதாவது: வண்டலுார் பூங்கா வரலாற்றில், விலங்குகள் இறப்பது, தப்பித்து செல்வது என்பது சமீப காலமாகத்தான் நடக்கிறது. ஒரு விலங்கை புதியதாக கூண்டில் விடும்போது, அந்த கூண்டு பாதுகாப்பாக உள்ளதா என்பதை ஆய்வு செய்த பிறகே விட வேண்டும். அப்படி செய்யாததால், கூண்டிற்குள் விட்ட சிறுத்தை பூனைகளில் ஒன்று தப்பியுள்ளது. இதற்கு அதிகாரிகளின் நிர்வாக சீர்கேடே காரணம்.

வழக்கம் போல், இவ்விஷயத்தில் அதிகாரிகளை விட்டுவிட்டு, கடைநிலை ஊழியர்களையே பழிவாங்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். பூங்கா உதவி இயக்குநர் மணிகண்ட பிரபுவிடம் கேட்டபோது, ''ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஜம்பு பூங்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட சிறுத்தை பூனைகளை கூண்டிற்குள் விட்டோம். அப்போது, ஒரு சிறுத்தை பூனை தப்பித்து விட்டது. குழு அமைத்து, தப்பி சென்ற சிறுத்தை பூனையை தேடி வருகிறோம்,'' என்றார்.

Advertisement