புறநகர் ரயில் நிலையங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்த பயணியர் வேண்டுகோள்

மறைமலை நகர், மே 6--–

செங்கல்பட்டு -– தாம்பரம் தடத்தில் உள்ள புறநகர் ரயில் நிலையங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஐந்து நகராட்சிகள், எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.

செங்கல்பட்டில் இருந்து கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்கு லட்சக்கணக்கானோர் சென்னை நோக்கியும், அதே போல் சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளான மறைமலை நகர், பொத்தேரி, கிளாம்பாக்கம், மகேந்திரா சிட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர்.

கடந்த பத்து ஆண்டுகளில் புறநகரில் குடியிருப்புகள் பன்மடங்கு அதிகரித்து உள்ளது. இதில் பேருந்து சேவையை விட புறநகர் மின்சார ரயிலை பயணியர் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் செங்கல்பட்டு -– சென்னை கடற்கரை ரயில் தடத்தில், செங்கல்பட்டு –- தாம்பரம் வரை உள்ள சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், பொத்தேரி உள்ளிட்ட ஒன்பது ரயில் நிலையங்களிலும் குடிநீர் வசதி இல்லாததால் பயணியர் அவதியடைந்து வருகின்றனர்.

இது குறித்து ரயில் பயணியர் கூறியதாவது:

செங்கல்பட்டு - – சென்னை கடற்கரைக்கு தினமும் பல்லாயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். குறிப்பாக காட்டாங்கொளத்துார், சிங்க பெருமாள் கோவில் ரயில் நிலையங்களில் உள்ள குடிநீர் இயந்திரம் பழுதடைந்து இரு ஆண்டுகளாகிறது. இதுவரை சீரமைக்கப்படவில்லை. மேற்கண்ட ரயில் நிலையங்களில் குடிநீர் வசதியின்றி பயணியர் கடும் அவதியடை கின்றனர். எனவே ரயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அனைத்து ரயில் நிலையங்களிலும் குடிநீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement