அரசு மருத்துவனை வளாகத்தில் குப்பைகளால் தொற்று அபாயம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவு வளாகத்தில் திறந்த வெளியில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி– கச்சிராயபாளையம் சாலையில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், கல்வராயன்மலை உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் அறுவவை சிகிச்சை கழிவுகள், கிளவுஸ் உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் மற்றும் பொதுமக்கள் உபயோகித்து துாக்கி வீசப்படும், பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள் உள்ளிட்ட குப்பைகள் அனைத்தும் துாய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படுகிறது.

சேகரமாகும் குப்பைகள் அனைத்தும் மூட்டைகளாக மருத்துவமனை வளாகத்திலேயே மரத்தடியின் கீழ் திறந்த வெளியில் வைக்கப்படுகிறது. மழையின் போதும் அங்கேயே கிடப்பதால் அதிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால், தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.

மருத்துவமனை வளாகத்தில் காத்திருக்கும் கர்ப்பிணிகளின் உறவினர்கள், குடும்பத்தினர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும், ஒரு சில நேரங்களில் குப்பைகள் தீ வைத்தும் எரிக்கின்றனர். அவ்வாறு எரிக்கும் போது புகை மூட்டத்தால் நோயாளிகளுக்கு கண் எரிச்சல் போன்ற உபாதைகள் ஏற்படுகிறது.

எனவே, மருத்துவமனையில் சேகரிக்கப்படும் குப்பைகளை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதபடி அப்புறப்படுத்த மருத்துவமனை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement