முதல்வர் பதவிக்கு அடிதடி

20

திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையை கைப்பற்றியுள்ளது. முதல்வர் யார் என்பது மட்டும் இன்னும் முடிவாகவில்லை.


காங்கிரசோ, பா.ஜ.,வோ எதுவாக இருந்தாலும், மேலிடம் சொல்பவர் தான் முதல்வர். 'எம்.எல்.ஏ.,க்களின் கருத்தை கேட்டோம்' என, பேச்சுக்கு சொல்வரே தவிர, முடிவெடுப்பதோ கட்சிகளின் தலைமை தான்.

காங்., லோக்சபா எம்.பி., கே.சி.வேணுகோபால், கட்சியில் மிகவும், 'பவர்புல்' ஆனவர். ராகுலுக்கு மிகவும் நெருக்கம். இவர், முதல்வர் பதவி வேண்டும் என்கிறார். காங்., கூட்டணிக்கு, 102 தொகுதிகளில் வெற்றி. இதில் காங்., 63. இதில், 40 பேர் வேணுகோபாலின் ஆதரவாளர்கள்.

சட்டசபையில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் காங்கிரசின் வி.டி.சதீஷன். 'இவரால் தான் காங்., வெற்றி பெற முடிந்தது' என்கின்றனர், இவரது ஆதரவாளர்கள். மூன்றாவதாக இருப்பவர் ரமேஷ் சென்னிதலா. இவரும், முதல்வர் பட்டியலில் உள்ளார் என்றாலும், அதிக வாய்ப்பில்லை என, கூறப்படுகிறது.

ராகுல், தனக்கு நெருக்கமான வேணுகோபாலை தான் முதல்வராக நியமிப்பார் என, சொல்லப்படுகிறது. இதனால், சதீஷனின் ஆதரவாளர்கள், அவருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இருதரப்புக்கும் ஆங்காங்கே அடிதடி நடந்து கொண்டிருக்கிறது. கடைசியில், வேணுகோபாலுக்கு தான் அதிக வாய்ப்பு என்கிறது டில்லி காங்., வட்டாரம்.

Advertisement