கல்வி நிலையம், பஸ் ஸ்டாண்ட் அருகேஉள்ள மது பார்களையும் மூட கோரிக்கை

தேனி, மே 14-மாவட்டத்தில் கல்வி நிலையங்கள், பஸ் ஸ்டாப், பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் மதுபார்களையும் மூட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மாநில அரசு உத்தரவில் பஸ் ஸ்டாண்ட், கல்விநிலையங்கள், வழிபாட்டு தலங்கள் அருகே உள்ள 717 அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. தற்போது மாவட்டத்தில் 81 அரசு டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 12 கடைகள் மூடப்பட உள்ளன. இது தவிர  48 தனியார் மதுபார்கள் செயல்படுகின்றன. இவை அரசு டாஸ்மாக் கடைகளை விட ஒரு மணிநேரம் முன்னரே திறப்பதால் கூட்டம் அலைமோதுகிறது. இந்த தனியார் மதுபார்கள் பெரும்பாலானவை குடியிருப்பு பகுதிகள், பைபாஸ் ரோடுகள், பஸ் ஸ்டாண்ட், கல்வி நிலையங்கள் அருகே அமைந்துள்ளன. 

பெரியகுளம் மூன்றாந்தல் பஸ் ஸ்டாப் அருகே செயல்படும் தனியார் மதுபார், வடகரை பஸ் ஸ்டாண்ட் அருகே செயல்படும் மதுபார் ஆகியவற்றை மூட மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அப்போதைய ஆளும் தரப்பினர் ஆதரவாக இருந்ததால் பார்களை மூட முடியாமல் இன்று தொடர்கிறது.

தனியார் மதுபார்களில் குடித்து விட்டு வருபவர்கள் மாணவிகள் வேலைக்கு சென்று வீடு திரும்பும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் அதிக அளவில் தனியார் மதுபார்கள் செயல்படுகின்றனர். இங்கு நடக்கும் சமூக விரோத செயல்களை தடுக்க தனியார் மதுபார்களை மூடவும் அரசு உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர். 

Advertisement