'ஸ்ட்ரீட் சைல்ட்' உலக கோப்பை கால்பந்து: அரை இறுதியில் இந்திய சிறுமியர் அணி

சென்னை: தெருவோர குழந்தைகளுக்கான உலக கோப்பை கால்பந்து தொடரில், சென்னை சிறுமியர் இடம்பெற்றுள்ள இந்திய அணி, அரையிறுதிக்கு தகுதி பெற்று, நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது.

வட அமெரிக்க நாடான மெக்ஸிகோவில் நடந்து வரும் உலக கோப்பை தொடரில், இந்தியா, ஜெர்மனி, பாலஸ்தீனம், பிரேசில் உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றுள்ளன.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த தொடரில், சென்னை 'கருணாலயா' அமைப்பின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணி, உலக அரங்கில் திறமையை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்து வருகிறது.

தொடக்க போட்டியில் மெக்ஸிகோ அணியிடம் தோல்வி கண்டாலும், அடுத்த போட்டியிலே வேல்ஸ் அணியை 5- - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பதிலடி கொடுத்தது.

தொடர்ந்து, பலம் வாய்ந்த பிரேசில் அணியிடம் இந்தியா 5- - 0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இதனால் சோர்ந்து போகாமல், பாலஸ்தீன அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி 6 - -0 என்ற கணக்கில் கோல் மழை பொழிந்து அபார வெற்றி பெற்றது.

மெக்ஸிகோ மற்றும் ஜெர்மனி அணிகளுக்கு எதிரான ஆட்டங்கள் தலா 1- - 1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தன.

'லீக்' சுற்று முடிவில், இந்திய சிறுமியர் அணி அரை இறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் இன்று நடக்க உள்ளன. பலம் வாய்ந்த அணிகளுடனான ஆட்டம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement