மக்களிடம் பீதியை உண்டாக்கும் ஏ.ஐ., தொழில் நுட்ப படங்கள்
சைபர் கிரைம் நடவடிக்கை தேவை
பரமக்குடி: பரமக்குடி பகுதிகளில் ஏ.ஐ., தொழில் நுட்பத்தில் தெருக்களில் விலங்குகள் நடமாடுவதைப் போல் படங்களை வெளியிடுவது அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களிடையே பீதியை உண்டாக்கியுள்ளது. இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில்(ஏஐ.,) பீதியை ஏற்படுத்தும் வகையில் படங்கள் வெளியிடுவது அதிகரித்து வருகிறது. இதனை வெளியிடும் இளைஞர்கள் விளையாட்டுப் போக்கில் நண்பர்களுக்குள் பகிர்ந்து கொள்கின்றனர். இவை சமூக வலைதளங்களில் முக்கியமாக வாட்ஸ்–அப்களில் செல்லும் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மனதளவில் பாதிக்கின்றனர்.
தற்போதைய சூழலில் பள்ளிகளில் அனைத்து செயல்பாடுகளும் அலைபேசிகளில் அனுப்பப்படுகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பினரும் அலைபேசியை பயன்படுத்துவது கட்டாயமாகியுள்ளது. தொடர்ந்து பரமக்குடி எமனேஸ்வரம் பகுதிகளில் தெருக்களில் கரடி, அனகோண்டா வகை பாம்பு சுற்றுவது போன்ற இரவு நேர சிசிடிவி., காட்சிகள் போல் கட்டமைக்கின்றனர்.
முக்கியமாக விலங்குகளை நாய்கள் துரத்துவது போன்று காட்சி அமைப்பதால் பலரும் நம்பும் படியாக உருவாகி மீண்டும் மீண்டும் பகிரப்படுவதால் பீதியை கிளப்புகின்றது. இதனால் உளவியல் ரீதியாக அனைத்து தரப்பு மக்களிடமும் பயத்தையும், அச்சத்தையும் உண்டாக்கி வருகிறது.
ஆகவே இச்செயலில் ஈடுபடுவோர் மேலும் தவறுகள் செய்யாத வகையில் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
––––